வடக்கு மாகாண காணி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற இருந்த சந்திப்பு திகதி குறிக்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண காணி விவகாரம் தொடர்பில் நேற்றைய தினம் சந்திப்பு இடம்பெற இருந்தது. கடந்த 18 ஆம் திகதி ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில், அதிகாரிகள் முழுமையான விவரங்களை சமர்ப்பிக்கவில்லை. இதனால் அதிருப்தியடைந்த ஜனாதிபதி, கூட்டத்தை 28 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்ததுடன் அன்றைய தினம் முழுமையான விவரங்களைச் சமர்ப்பிக்குமாறு தெரிவித்திருந்தார்.
உடல் நலக் குறைவால் 18 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் வடக்கு மாகாண முதலமைச்சர் கலந்துகொண்டிருக்கவில்லை. இந்தநிலையில், நேற்றைய கூட்டத்துக்கு வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலையில், நேற்று இடம்பெறவிருந்த கூட்டம் இரத்துச் செய்யப்பட்டிருப்பதாக இரண்டு தினங்களுக்கு முன்னர் அரச அதிகாரிகளுக்கு தொலைநகல் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், வடக்கு மாகாண முதலமைச்சருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், நேற்றைய தினம் எந்தச் சந்திப்பும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.