மைத்திரி அரசாங்கம், தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை : பசில் ராஜபக்‌ஷ

தமிழர்களின் வாக்கின் மூலம் ஆட்சிக்கு வந்த மைத்திரி அரசாங்கம், தமிழ் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

இரண்டு நாட்கள் விஜயம் மேற்கொண்டு வடக்குக்குச் சென்றிருந்த பசில் ராஜபக்‌ஷ, அங்கு தமது புதிய கட்சியான பொதுஜன முன்னனியின் செயற்பாடுகளை ஆரம்பித்து வைப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார். இதன் ஒரு கட்டமாக, யாழில் இளங்கலைஞர் மண்டபத்தில், இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்ட விடயத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அங்கு அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

“தற்போதுள்ள அரசாங்கம் 33 மாதங்களாக செயற்பட்டு வருகின்றது. மகிந்த ராஜபக்ஷ 2006ஆம் ஆண்டு காலப் பகுதியிலே ஆட்சி ஏறும்போது வடக்கின் நிலை எப்படி காணப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். அவ்வாறான நிலையிலிருந்து வடக்கு மக்களை மீட்டெடுத்து அவர்களுக்கு சமாதானத்தையும் அபிவிருத்தியையும் சக்தியையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற இலக்குடனேயே அவர் ஆட்சிப் பீடம் ஏறியிருந்தார்.

அவ்வாறு அவருடைய இலக்கின் காரணமாகவே தான், கடந்த காலங்களில் ஆயுதங்களை ஏந்திய சிறுவர்கள் இன்று பேனைகளைப் பிடித்து எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு சமாதான சூழலைக் கட்டியெழுப்பிய பின்னர், அவர் வடக்கின் அபிவிருத்தி தொடர்பாக கவனிக்கத் தொடங்கியிருந்தார். அந்தவகையில், வடக்குக்கு யாழ்தேவியைக் கொண்டுவந்தார், ஏ9 பாதையை திறந்து அதனை காப்பற் வீதியாக்கினார், பாடசாலைகள், வைத்தியசாலைகளை உருவாக்கி கல்வி சுகாதரத்தை முன்னேற்றமடையச் செய்தார்.

இவற்றைவிட, மின்சார வசதியை, வவுனியாவிலிருந்து சுன்னாகம் வரை 365 நாட்களும் 24 மணிநேரமும் கிடைக்கும்படியாக செய்தார். துரையப்பா விளையாட்டரங்கை புனரமைத்துக் கொடுத்தார். யாழ். பல்கலைகழகத்தை அபிவிருத்தி செய்தார். பாடசாலைகளில் தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தார். மீன்பிடித்துறை, விவசாயத்துறையை மேம்படுத்திக் கொடுத்தார்.

இவ்வாறாக, வடக்கு மக்கள் சுதந்திரமாகவும் வசதியாகவும் வாழ்வதற்கான சகல நடவடிக்கைகளையும் ஏற்படுத்தி கொடுத்தது மகிந்த ராஜபக்ஷவே. ஆனால், இன்றுள்ள புதிய அரசாங்கம் எதனை செய்துகொடுத்துள்ளது. குறிப்பாக இவ்வாட்சி அமைவதில் பாரிய பங்காற்றிய வடக்கு மக்களுக்கு இந்த அரசாங்கம் என்ன அதிகாரத்தை அவர்களது கையிலே கொடுத்திருக்கின்றது?. இந்த அரசாங்கம் எதனையுமே கொடுக்கவில்லை.

நாம் எல்லாவற்றிலுமே தற்போது தோல்வி கண்டு செல்கின்றோமே தவிர வேறெதனையும் இந்த அரசாங்கம் உங்களுக்கு வழங்கவில்லை. நாம் வடக்குக்கு வழங்கிய அபிவிருத்திகளில் புதிதாக எதனையாவது இந்த அரசாங்கம் ஏற்படுத்தி கொடுத்துள்ளதா? எனவே தான் நாம் கூறுகின்றோம் எதிர்காலத்தில் நீங்கள் எம்மோடு இணைந்து பயணிக்க வேண்டும். அதனூடாக நாம் எதிர்காலத்தில் இடம்பெறப்போகும் அனைத்து தேர்தல்களிலும் வெறியடைவோம்” எனத் தெரிவித்தார்.

Related Posts