முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு அளித்து வந்த முன்னாள் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் மலையகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் பலரும் அதிபர் மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து தமது ஆதரவை பகிரங்கமாகத் தெரியப்படுத்தியுள்ளனர்.
பதினான்கு சிறு கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று மாலை சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோக பூர்வ இல்லத்தில் சந்தித்துள்ளனர்.
இந்த சந்திப்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சயின் பொதுச் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
இவர்கள் அனைவரும் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியின்போது அவருக்கு ஆதரவாக தமது தொகுதிகளில் ஆதரவைத் திரட்டியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தற்போது இவர்கள் அனைவரும் மைத்திரியின் பக்கம் சாய்ந்துள்ளனர். எதிர்வரும் மே தினம் முதல் அதிபர் மைத்திரிபால சிறிசேனவை முழுமையாக ஆதரித்து செயற்படவிருப்பதாகவும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் அதிபரின் முன்னிலையில் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
இதனை வரவேற்ற சிறீலங்கா அதிபர் மே தினத்திற்குப் பின்பு அரசாங்கத்தைக் குழப்பும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்களை அவர்கள் நினைத்தபடி செயற்படுவதற்கு விடப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.