ராஜபக்ச படையணியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவர மைத்திரிபால சிறிசேனவை நாம் பொது வேட்பாளராகக் களமிறக்கிப் போராட்டம் செய்கின்றோம், என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கெளதம புத்தர் சமாதானமாக ஒன்று கூடுங்கள், சமாதானமாகப் பேசுங்கள், சமாதானமாகக் கலைந்து செல்லுங்கள் எனப் போதனை செய்தார். ஆனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசினர் தனியாக ஒன்றுகூடி தனியாகப் பேசி தனியாக முடிவெடுக்கின்றனர்.
உலகில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை உள்ள நாடுகளில் 2 தடவைக்கு மேல் எவரும் ஆட்சியில் இருக்கவில்லை. அமெரிக்காவில் ஆகக்கூடியது 8 வருடங்கள்தான் ஒருவர் ஜனாதிபதியாக இருக்க முடியும்.
இலங்கையில் ஆகக்கூடியது 12 வருடங்கள். ஆனால், தற்போதைய ஜனாதிபதி இவை அனைத்தையும் உடைத்து, பல கட்சி ஆட்சி முறையை உடைத்து, மக்கள் உரிமையை இல்லாதொழித்துள்ளார், என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ராஜபக்ச படையணியின் ஆட்சியை நிறுத்த மைத்திரிபால சிறிசேனவை நாம் பொது வேட்பாளராகக் களமிறக்கிப் போராட்டம் செய்கின்றோம். எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்து 100 நாள்களுக்குள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை இல்லாதொழிக்கப்படும்.
சுயாதீன பொலிஸ், தேர்தல், அரச சேவைகள் திணைக்களங்கள் அமைக்கப்படும். புதிய அரசமைப்பு உருவாக்கப்படும். இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு வழங்கப்படுவதுடன், பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.