ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பாக கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் மேற்கொண்ட விசாரணையின்போது பல அதிர்ச்சித் தகவல்களை அவர் வெளியிட்டுள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்யும் திட்டம் அவற்றில் ஒன்றாகும்.
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு தனது உதவியை மஹிந்த நாடியதாக பிள்ளையான் தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் அல்லது கிழக்கு மாகாணத்தில் வைத்து அவரைப் படுகொலை செய்யுமாறு தன்னிடம் மஹிந்த ராஜபக்ஷ வேண்டிக்கொண்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் அவ்வாறு செய்தால் தான் மாட்டிக் கொள்ள நேரிடும் என்பதால் கொழும்பில் வைத்து மைத்திரிபாலவை படுகொலை செய்யும் திட்டமொன்றை பிள்ளையான் முன்வைத்துள்ளார். அதனை மஹிந்த நிராகரித்துள்ளார்.
பின்னர் இருதரப்பின் இணக்கப்பாட்டுடன் கொழும்பை அண்மித்த பொரலஸ்கமுவையில் மைத்திரிபால சிறிசேன மீது தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்காக பிள்ளையான் தரப்பு பெண்ணொருவர் இந்தத் தாக்குதலை மேற்கொண்ட போதிலும், நூலிழையில் மைத்திரிபால சிறிசேன உயிர் தப்பிக் கொண்டதாகப் பிள்ளையான் தெரிவித்துள்ளார்.