மே 18 ஐ நினைவு நாளைக் கொண்டாட வேண்டும் – சிவாஜிலிங்கம்

Sivaji-lingamமுள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினத்தினை நாங்கள் மறந்தாலும் அரசு மறக்காது’ என வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

கோவில்கள் மற்றும் தேவாலயங்களில் மே 18 ஐ நினைவு நாளைக் கொண்டாட வேண்டுமென்று பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கின்றேன்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவு தினம் அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டாயமாக கற்றல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டு, மாணவர்களை வீடுகளுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான செயற்பாடுகள் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும். அத்துடன் யாழ். மாவட்டத்திலும் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். நினைவு தினம் கொண்டாடுவதற்கான கால நேரத்தினை தற்போதே தெரியப்படுத்தினால், அதனை தடுப்பதற்கான நடவடிக்கையினை இராணுவத்தினர் மேற்கொள்வார்கள்.

பாதிக்கப்பட்ட அனைத்து மக்களும் அப்படுகொலை நினைவினை நினைவு கூர்ந்து கொண்டாடுவதற்கான உரிமையினை தமிழ் தேசிய கூட்டமைப்பினராகிய தாம் உறுதிப்படுத்துவோம் என்றும் அவர் கூறினார்.

ஆட்சேர்ப்பில் இளைஞர்கள் இணைய வேண்டாம்

இனப்பிரச்சினைக்கு தீர்வு வரும் வரைக்கும் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் இளைஞர் யுவதிகள் இணைந்து கொள்ள வேண்டாம், அவ்வாறு செல்வதினால் வரும் பிரச்சினைக்கு உத்தரவாதம் வழங்க முடியாது என்று சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினை பொறுத்தவரையில் பொதுமக்களிடம் வேறுபட்ட கருத்துக்கள் இருக்கின்றன. அச்சுறுத்தப்பட்டு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், வறுமையும் ஒரு காரணமாக இருக்கின்றது. அங்கு கொடுக்கும் 10 ஆயிரம் ரூபா பணத்தினை பெற்றுக் கொள்வதற்கான நிலைமை இருக்கின்றது.

இராணுவத்தில் இணைந்தவர்களில் பலர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்கள். அத்துடன் பொலிஸில் இணைந்து கொண்டவர்கள் கூட பொலிஸில் இருந்து அண்மைக்காலமாக விலகிக் கொள்கின்றார்கள்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வோ அல்லது கட்டமைப்போ ஏற்படும்போது இன விகிதாசார அடிப்படையில் அனைத்து இனத்தினரும் முப்படையில் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும். ஆனால், தற்போது, தமிழ் இளைஞர், யுவதிகளை எடுபிடிகளாக இராணுவத்தில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

தற்போது, நடன ஆசிரியர், சங்கீத ஆசிரியர்களுக்கு என ஆட்களை சேர்க்கின்றார்களே தவிர படையினரின் மேஜர், ஜெனரல், பிரிகேடியர் பதவிகளுக்கு இணைக்கப்படவில்லை. அதை இளைஞர் யுவதிகள் புரிந்துகொள்ள வேண்டும்.

ஜெனிவா பிரச்சினையினை திசை திருப்புவதற்காக அவசர ஆட்சேர்ப்பு நடைபெறுகின்றது. கடந்த 5 வருடங்களாக செய்யாத விடயத்தினை இப்போது ஏன் அரசு செய்கின்றது. வன்னிப்பகுதியில் சில பெண்களை இராணுவத்திற்கு இணைத்துக் கொண்டவர்கள் ஏன் ஆண்களை இணைத்துக் கொள்ளவில்லை. ஜெனிவாவில் அரசாங்கத்திற்கு இறுக்கமான நிலை ஏற்பட்ட பின்னர் ஆட்சேர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது.

அதேவேளை, இனப்பிரச்சினைக்கு தீர்வு வரும்வரை இளைஞர், யுவதிகள் ஆட்சேர்ப்பு நடவடிக்கைக்கு செல்வீர்களாயின் வரும் பிரச்சினைகளுக்கு நாங்கள் உத்தரவாதம் வழங்க முடியாது.

இவ்வாறான ஆட்சேர்ப்பு விடயங்களிற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டாமென்று பகிரங்கமாக சொல்வதுடன், பொதுமக்களின் ஒத்துழைப்பு இறந்த போன ஆத்மாக்களுக்கும் இருக்கின்ற மக்களுக்கும் கிடைக்கின்ற அரசியல் தீர்வினைக் குழப்புதல் மற்றும் சர்வதேச விசாரணை தள்ளிப் போக செய்கின்றீர்கள் என்பதினை இளம் சமுதாயத்தினர் புரிந்துகொள்ள வேண்டும்’ என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related Posts