மே-18 இல் கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்து!

முள்ளிவாய்க்கால் நினைவு தினமான மே-18 அன்று வடக்கு மாகாண பாடசாலைகள் அனைத்திலும் மாகாண சபை கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவுறுத்தலை வடக்கு மாகாண சபையின் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், நேற்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“கடந்த எழுபதாண்டுகாலமாக எமது தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக அகிம்சை வழியிலும் பின்னர் ஆயுத ரீதியிலும் நாம் போராடி வந்துள்ளோம்.

எமது ஆயுதப் போராட்டம் பயங்கரவாதமாகச் சித்திரிக்கப்பட்டு கடந்த 2009 ஆம் ஆண்டு மே 18ஆம் திகதி சர்வதேச சமூகத்தைப் பிழையாக வழிநடத்தி மௌனிக்கச் செய்யப்பட்டது.

கடந்த முப்பதாண்டு போராட்டத்தில் நாம் ஏராளமான இளைஞர் யுவதிகள் உள்ளிட்ட இலட்சக்கணக்கான உயிர்களை களப்பலி கொடுத்துள்ளோம். குறிப்பாக இறுதியாக எம்மக்கள்மீது நடைபெற்ற தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை இழந்துள்ளதுடன் பல்லாயிரக்கணக்கனக்கானோருக்கு என்ன நடந்தது என்பதை அறிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ளோம்.

எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான வேள்வியில் ஆகுதியானவர்களை உணர்வுடன் நினைவுகூர வேண்டியது எம்மினத்தின் கடமையாகும். எனவே எமது மாகாணத்தின் அனைத்துப் பாடசாலைகளும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று வடக்கு மாகாணச பையின் கொடியினை அரைக்கம்பத்தில் பறக்கவிடுமாறும் அன்று காலை பதினொரு மணிக்கு அனைத்து பாடசாலைகளிலும் அனைவரும் அகவணக்கம் செலுத்துமாறும் அனைத்து அதிபர்களையும் பணிவுடன் கேட்டுக்கொள்கின்றேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Posts