மே 18 இல் உறவுகளை நினைவுகூருங்கள்! – தமிழர்களின் கடமைக்கு தடை ஏதுமில்லை!!

“வடக்கு, கிழக்கு உள்ளிட்ட நாட்டில் எந்தப் பகுதியிலும் தமிழர்கள் போரின்போது இறந்த தமது உறவுகளை நினைவுகூரலாம். அதற்கு எந்தத் தடையும் இல்லை. எனவே, எதிர்வரும் 18 ஆம் திகதி தமது உறவுகளை தமிழ் மக்கள் நினைவுகூரலாம். அது அவர்களது உரிமையாகும், கடமையாகும்.” – இவ்வாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

ruwan gunasekara police

எனினும், பயங்கரவாதிகளாக அறியப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்தல், அது தொடர்பில் பொதுவான நிகழ்வுகளை நடத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் தடைசெய்யப்பட்டவை. அவற்றை முன்னெடுக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இறுதிப் போரில் உயிரிழந்த தமிழ் உறவுகளை நினைவுகூர்ந்து எதிர்வரும் 18ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினத்தை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்க ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதென்பது மனிதாபிமான செயல். அத்துடன் அது உறவுகளின் உரிமையாகும். அப்படி இருக்கையில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் எதிர்வரும் 18ஆம் திகதி தமது உறவுகளை நினைவுகூரும்போது அதற்கு யாரும் தடைவிதிக்க முயாது. நாமும் தடை விதிக்கவில்லை. உறவுகளை நினைவுகூர்வது தமிழர்களின் உரிமையாகும்; கடமையாகும். வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி நாட்டில் எந்தப் பிரதேசத்திலும் இறந்த ஒருவருக்காக உறவினர்கள் அஞ்சலி செலுத்தலாம்.

இந்நிலையில், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பு என்ற ரீதியில் தமிழீழ விடுதலைப்புலிகளை நினைவுகூர்வதே சட்டவிரோதமானது என்ற ரீதியில் நாம் தடைசெய்துள்ளோம். விடுதலைப்புலிகள் சட்டவிரோத பயங்கரவாத அமைப்பு என்ற ரீதியில் அவர்களை நினைவுகூர்வது தவறாகும். அதன்படியே புலிகள் அமைப்பை நினைவுகூரும் விதமாக பொது இடங்களில் கூட்டங்களை நடத்துவது, சுடர் ஏற்றுவது உள்ளிட்ட நிகழ்வுகளை நாம் தடை செய்கிறோம்.

அவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுவோரை நாம் கைதுசெய்வோம். அண்மையில் வடக்கு மாகாணசபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிவாஜிலிங்கம் புலிகளை நினைவுகூர்ந்து சுடர் ஏற்றுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. இந்நிலையில் முல்லைத்தீவு உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் குழுவொன்று அங்கு சென்று அவரிடம் விளக்கம் கோரியபோது, அவர் போரின்போது உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். அது அவரது உரிமை. அவரது உறவுகளுக்கு அவரால் அஞ்சலி செலுத்த முடியும். அதில் எவ்வித தவறும் இல்லை” – என்றார்.

Related Posts