மே 18ம் தேதி விவேகம் டீசர், அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில் அஜித், விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் மற்றும் பலர் நடிக்கும் படம் ‘விவேகம்’. இப்படத்தின் முதல் பார்வையும், படத்தின் தலைப்பும் பிப்ரவர் 2ம் தேதி வெளியிடப்பட்டது. அந்த முதல் பார்வையில் அஜித்தின் கட்டுமஸ்தான தோற்றமும், போஸ்டரின் டிசைனும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அஜித் ரசிகர்கள், அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதியன்று படத்தின் டீசர் வெளியாகும் என்று மிகவும் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால், அன்றைய தினம் டீசர் வெளியிடப்படவில்லை. பல்கேரியாவில் தொடர் படப்பிடிப்பு நடைபெறுவதால்தான் டீசர் அப்போது வெளியிடப்படவில்லை என தகவல்கள் தெரிவித்தன. விரைவில் பல்கேரியாவில் படப்பிடிப்பு முடிந்து குழுவினர் இந்தியா திரும்ப உள்ளனர்.

முதல் பார்வையை வெளியிட்ட பிறகு கடந்த சில மாதங்களாக அடிக்கடி அஜித்தின் சில புகைப்படங்களை வெளியிட்டு அஜித் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தார் இயக்குனர் சிவா. நேற்று இரவு அவர் வெளியிட்டுள்ள டீசர் வெளியீட்டு அறிவிப்பு அஜித் ரசிகர்களுக்கு மிகப் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். மே 18ம் தேதி வியாழக்கிழமை, வழக்கம் போல 12.01 மணிக்கு ‘விவேகம்’ படத்தின் டீசர் வெளியாக உள்ளது.

Related Posts