அரச உயர் அதிகாரிகள், ஐரோப்பிய முறையிலான ஆடைகளை அணிவது கட்டாயம் என முன்னாள் ஜனாதிபதி ஏற்படுத்தியிருந்த சுற்றுநிருபத்தை தான் இல்லாது செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறினே தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில், அரச சேவையின் உயர் அதிகாரிகள், இனிமேல் அத்தியாவசிய தேவைகளை விடுத்து, ஏனைய சந்தர்ப்பங்களில் கழுத்துப் பட்டி மற்றும் கோட் உடனான உத்தியோகப்பூர்வ ஆடை அணிய வேண்டியதில்லை என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அங்கு ஜனாதிபதி உரையாற்றுகையில், “கடந்த டிசெம்பர் 31ஆம் திகதி பொலன்னறுவைக்கு வருடாந்த பிரித் நிகழ்வில் கலந்துக்கொள்ளச் சென்றிருந்தேன். இரவு 11 மணியிருக்கும். பிரதேச செயலாளர் கழுத்துப்பட்டி மற்றும் கோட் அணித்து பிரித் கேட்டுக்கொண்டிருந்தார். இரவு நேரமல்லா, ஏன் இவ்வாறு கழுத்துப் பட்டி, கோட் அணிந்து அவர் சமய நிகழ்வில் கலந்துக்கொள்கிறார்? என்று கேட்டேன். நான் நினைக்கின்றேன் அவர் மீது இந்த சுற்றுநிருபம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று” இவ்வாறு ஜனாதிபதி கூறினார்.