மேலும் 10 மாணவர்களை விசாரணைக்கு ஒப்படைக்கவும் – பயங்கரவாத தடுப்பு பொலிசார் கோரிக்கை! தொடரும் அச்சுறுத்தல்!

பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற அசம்பாவிதங்கள் தொடர்பில் மேலும் 10 மாணவர்களை விசாரணைக்கு ஒப்படைக்குமாறு பயங்கரவாத தடுப்பு பொலிசார் பல்கலைக்கழகத்திடம் கோரிக்கை விடுத்திருப்பதாக தெரியவருகின்றது.இவர்களது பெயர்ப்பட்டியலை துணைவேந்தருக்கு அனுப்பியிரு்ப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் யாழ் பல்கலைக்கழகத்தின் ஒவ்வொரு பீடத்தினதும் மாணவர் சங்கங்களின் சகல தலைவர் செயலாளர்களையும் விசாரணைக்கு சமூகமளிக்குமாறு அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் மற்றொரு செய்தி தெரிவிக்கின்றது.

இதே வேளை ஆரம்பத்தில் 4 மாணவர்களை கைது செய்யப்படும் காலத்தில் இருந்தே தேடப்பட்டுவரும் முகாமைத்துவ பீடமாணவர் சங்கத்தினைச்சேர்ந்த மாணவர் தலைமறைவாகி உள்ளதாகவும் மீண்டும் மீண்டும் பொலிசார் அவருடைய வீட்டுக்கு சென்று விசாரித்து வருகின்றதாகவும் தெரியவருகிறது. அத்துடன் அவர் பாதுகாப்புக் கருதி நீதிமன்றத்தில் சரணடைய முயற்சிகள் எடுத்ததாகவும் நீதிமன்ற வட்டாரங்கள் மறுத்துவிட்டதாகவும் அச்செய்திகள் தெரிவித்தபோதிலும் எந்த நீதிமன்றம் இவ்வாறு மறுப்பு தெரிவித்தது என்பது குறித்த தகவலை பெறமுடியவில்லை.

இதே வேளை மேறபடி மாணவன் பாதுகாப்புக் கருதி பல்கலைக்கழகம் ஊடாக பொலிசாரிடம் விசாரணைக்காக சரணடைவதற்காக விருப்பம் தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது.இதேவேளை ஏற்கனவே கைதுசெய்யப்பட்ட 4 மாணவர்களில் சில மாணவர்களை அப்போதைய பல்கலைக்கழக பதில் துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி அவர்கள் பொலிசாரிடம் பாதுகாப்பாக விசாரணைக்கு ஒப்படைத்தபோது ஊடகங்கள் சில அவர்களை பிடித்துக்கொடுத்ததாக கிண்டலடித்து கண்டித்து செய்தி வெளியிட்டதனால் பல்கலைக்கழகம் தற்போது மாணவர்களை ஒப்படைக்கும் விடயத்தில் மிக அவதானமாக செய்படவேண்டியிருப்பதாக உள்ளகத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே பல சுற்று பேச்சுவார்த்தைகள் மற்றும் தொடர் எதிர்ப்பலைகளின் விளைவாக கைது செய்யப்பட்ட மாணவர்களில் மருத்துவபீட மாணவர் ஒருவர் விடுதலைசெய்யப்பட்டு பல்கலைக்கழக சூழலில் இருந்து இராணுவத்தினர் அகற்றப்பட்டு பொலிசார் மட்டும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களை இரவில் கைது செய்து அச்சுறுத்தலை ஏற்படுத்துவதை தவிர்க்குமாறு ஏற்கனவே பல்கலைக்கழகம் கோரியிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.இருப்பினும் தலைமறைவான மாணவனுக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலை தொடர்பில் தீர்வு வேண்டி மாணவர்கள் தொடர் வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டுவருகின்ற இந்நிலையில் தொடரும் மாணவர் விசாரணைப்படலம் பல்கலைக்கழக மட்டத்தில் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதாக பலரும் கருத்து தெரிவிகின்றனர்.

மாணவர் போராட்டங்கள் தொடர்பில் தென்னிலங்கையில் ஒரு சட்டம் வட இலங்கையில் ஒருசட்டமா என மாணவர் மற்றும் விரிவுரையாளர் தரப்பு விசனம் தெரிவிக்கிறது.இதன் மூலம் முறுகலை மேலும் வளர்க்க முடியுமே தவிர முடிவுக்கு கொண்டுவரமுடியாது எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.சர்வதேச மன்னிப்புச்சபை மாணவர்களின் உரிமைகள் தொடர்பில் தனது கவலையிலை தெரிவித்திருக்கின்ற இந்நிலையில்

துணை வேந்தர் அலுவல் நிமித்தம் கொழும்புக்கு சென்றிருப்பதால் பதில் துணைவேந்தராக பேராசிரியர் சத்தியசீலன் நியமிக்கப்பட்டிருக்கின்றார்.தொடர்ந்து பதட்ட நிலையில் இருக்கின்ற யாழ் பல்கலைக்கழகம் எப்போது வழமைக்கு திரும்பும் இது தான் இன்று சகலரிடமும் இருக்கும் வினா!

இதேவேளை யாழ். குடாநாட்டில் கடந்த இரு தினங்களாக பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸாரால் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுமார் 25 பேர் இது வரை கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என பயங்கரவாத தடுப்பு தலைமையகம் தெரிவித்ததாக பிபிசி தெரிவித்துள்ளது

Related Posts