மேலும் மூன்று பேர் கைது என முறைப்பாடு

பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கடந்த 14 ஆம், 15 ஆம் திகதிகளிலும் யாழ். குடாநாட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக இவர்களின் உறவினர்களால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் நேற்று திங்கட்கிழமை முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ். குடாநாட்டில் கடந்த நவம்பர் 30 ஆம் திகதியிலிருந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் பல்கலைக்கழக மாணவர்கள் முதல் முன்னாள் போராளிகள் வரை பலர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் கைதுகள் எவையும் இடம்பெற்றிருக்காத நிலையில், வார இறுதியில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14 ஆம் திகதி தெல்லிப்பழைப் பிரதேசத்தில் ஒருவரும், 15 ஆம் திகதி பருத்தித்துறை தாளையடியில் ஒருவரும், நெல்லியடிப் பிரதேசத்தில் ஒருவரும் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நிர்வகிக்கப்பட்டு வந்த நிறுவனங்களில் பணியாற்றியவர்களே என்று தெரிவிக்கப்படுகிறது.

நேற்றுப் பதிவான 3 முறைப்பாடுகளுடன் இது வரை பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கைதுகள் தொடர்பான முறைப்பாடுகளின் எண்ணிக்கை 37 ஆக உயர்வடைந்துள்ளது

Related Posts