பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்து இதுவரையில் 43 முறைப்பாடுகள் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் பதிவாகியுள்ளதாகப் பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.
யாழ். குடாநாட்டில் கடந்த மாதம் 27 ஆம் திகதி மாவீரர் தினத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் பலர் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டு வருகின்றனர். வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள், தமிழீழ விடுதலைப் புலிகளால் நிர்வகிக்கப்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்தவர்கள் எனப்பலரும் கைதுசெய்யப்பட்டு வருகின்றனர்.
வல்வெட்டித்துறைப் பிரதேசத்தில் கடந்த 17 ஆம் திகதி இருவரும், கடந்த 5 ஆம் திகதி கோப்பாய் பிரதேசத்தில் ஒருவரும், கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த 14 ஆம் திகதி ஒருவருமாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான முறைப்பாடுகள் நேற்றுப் புதன்கிழமையே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் கிளையில் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நேற்றையதினம் பதிவு செய்யப்பட்ட 4 முறைப்பாடுகளுடன் இதுவரையில் யாழ். குடாநாட்டில் 43 பேர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவற்றில் 2 முறைப்பாடுகள் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டமை தொடர்பிலும், 4 முறைப்பாடுகள் கிளிநொச்சி மாவட்டத்தில் கைது செய்யப்பட்டமை தொடர்பிலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பதிவாகியுள்ளன.