“எந்த இனம் அல்லலுற்றாலும் பரவாயில்லை அந்த இனத்தின் பெண்களை திருமணம் செய்லாம் என்றுதான் அமைச்சர் மேர்வின் ஏங்கிக் கொணடிருக்கிறார்.
அவருக்குப் பெண் விசர் நோய் பிடித்திருக்கிறதா என்பதை ஆராய்ந்து மனநோய் வைத்தியரிடம் சிகிச்சை அளிக்க வேண்டியது அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.
அல்லது அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டியேற்படும்.” – சமூக நல்லெண்ணத்தை கருத்தில் கொண்டு முஸ்லிம் பெண்ணைத் தான் திருமணம் செய்ய வேண்டும் என அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தமை தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரியநேத்திரன் எம்.பி. இவ்வாறு கடுமையாக விமர்சித்தார்.
இந்த விடயம் குறித்து அவர் மேலும் கூறியவை வருமாறு;
முஸ்லிம் மக்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்ந்து அவர்களுக்கு எதிராக குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களை தண்டிக்காது, முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்று கூறுவது, ஒரு ஜனநாயக நாட்டின் பொறுப்புள்ள அமைச்சர் ஒருவரின் செயற்பாடு இதுதானா என்ற கேள்வியை இந்த நாட்டின் அமைச்சரவையைப் பார்த்துக் கேட்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியிருக்கின்றது.
முன்னர் ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்ஸிலின் செயலாளர் நவநீதம்பிள்ளையை தான் திருமணம் செய்து கொள்வார் என அவர் கூறியிருந்தார். இந்தக் கூற்றானது ஒரு அமைச்சரின் வாயிலிருந்து வரும் கூற்றல்ல மாறாக எந்தப் பொறுப்புணர்ச்சியும் இல்லாத ஒருவரிடமிருந்து வரும் கூற்றாகவே பார்க்க வேண்டியிருக்கின்றது.
இவருடைய வேலை தமிழ், முஸ்லிம் பெண்களைத் திருமணம் முடிப்பதுதானா? அமைச்சர் மேர்வினுக்குப் பெண் விசர் நோய் பிடித்திருக்கின்றதா என்பதனை ஆராய்ந்து மனநோய் வைத்தியரிடம் சிகிச்சை அளிக்கவேண்டியது அரசாங்கத்திற்கு இருக்கும் மிக முக்கிய பொறுப்பாகும்.
அவ்வாறு இல்லாமல் இவரது கீழ்த்தரமான செயற்பாடுகளை நகைப்பிற்குரியதாக அரசாங்கம் எடுக்குமானால் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலை உருவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்
தொடர்புடைய செய்தி
இன ஐக்கியத்திற்காக முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறேன்!- மேர்வின் சில்வா