மேதானந்த தேரர் முதலில் வரலாறு படிக்க வேண்டும்;மாவை சேனாதிராசா

வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் பாரம்பரிய பூமி அல்ல என்று கருத்துரைப்பதன் மூலம் வடக்குக் கிழக்கில் பெளத்த ஆதிகத்தை நிலைநிறுத்தி தமிழ் மக்களை அழிக்கும் முயற்சியில் மேதானந்த தேரர் வெளிப்படையாகவே ஈடுபட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கண்டனம் வெளியிட்டுள்ளார்.

தேரரின் கருத்துக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் விரைவில் ஆதாரப் பூர்வமாக பதிலளிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

வடக்குக் கிழக்கு தமிழரின் பூமியல்ல அவ்வாறு உரிமை கோருவதற்கு தமிழர்களுக்கு எந்தவிதமான சான்றோ அல்லது உரிமையோ கிடையாது என ஜாதிய ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவெல மேதானந்த தேரர் தெரிவித்த கருத்துத் குறித்து தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
மேதானந்த தேரர் முதலில் வரலாறு படிக்க வேண்டும். அவருக்கு இலங்கையின் வரலாறு தொடர்பாக முழுமையான அறிவு கிடையாது.

வடக்கு கிழக்குப் பகுதியானது தமிழர்களின் பூர்வீக வாழ்விடம். இதனை காலத்திற்கு காலம் எழுந்த வரலாற்று நூல்கள் எடுத்துக் கூறுகின்றது. இதனை யாரும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது.

தேரரின் கருத்துக்கு பதிலளிக்க வேண்டிய கடமை வரலாற்று ஆசிரியர்களுக்கு உள்ளது. எனவே இவிடயம் தொடர்பாக விரைந்து வரலாற்று ஆசிரியர்கள் பதிலளிக்க வேண்டும் என கோரிக்கைவிடுத்ததோடு,

கே.எம்.டி சில்வா என்னும் சிங்கள வரலாற்று ஆசிரியர் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதி தமிழர் செறிந்து வாழும் பகுதி என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்பகால அரசியலமைப்புச் சீர்திருத்த சட்ட மூலங்களின் ஆதரங்களிலே தமிழர்களின் பாரம்பரிய பூமியாக வடக்குக் கிழக்கு பகுதி என அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் அரசியல் அமைப்பில் வடக்கு கிழக்கு தமிழ் மக்களின் செறிந்த குடிப்பரம்பலுடன் காணப்படுவதாக கூறுகின்றது.

இதனை எல்லாம் அறியாத தேரர் இவ்வாறான கருத்துக்களை கூறி மகிந்த அரசின் துணையுடன் வடக்குக் கிழக்கில் பெளத்த ஆதிகத்தை நிலைநிறுத்தி தமிழ் மக்களை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

Related Posts