மெரினா கடற்கரையில் முள்ளிவாய்கால் அஞ்சலி

இலங்கை தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட 7-ம் ஆண்டு நினைவு அஞ்சலி மெரினா கடற்கரையில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில், வைகோ கலந்துகொண்டார்.

may-18-india-vaiko

கடந்த 2009-ம் ஆண்டு மே மாதம் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத்தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்த படுகொலை சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, மே 17 இயக்கம் சார்பில் சென்னை மெரினா கடற்கரையில் நினைவு அஞ்சலி கூட்டம் நேற்று நடந்தது.

இதில், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன், விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன், ஓவியர் சந்தானம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.மெழுகுவர்த்தி ஏந்தி பலியான ஈழத்தமிழர்களுக்கு அனைவரும் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் கடற்கரை மணற்பரப்பில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவு தூணில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

கூட்டத்தின் முடிவில் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, தி.மு.க. அங்கம் வைத்த அரசு திட்டமிட்டு விடுதலைப்புலிகளை அழிக்க வேண்டும் என்று இலங்கைக்கு உதவியது.

இனப்படுகொலைக்கு முக்கிய குற்றவாளி முந்தைய மத்திய அரசு தான். இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் சிங்கள குடியேற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அதை தடுத்து நிறுத்த வேண்டும்.இலங்கை தமிழர்கள் சிந்திய ரத்தமும், முத்துகுமார் உள்பட 19 பேர் செய்த உயிர் தியாகமும் ஒரு போதும் வீண் போகாது.

பிரபாகரன் கண்ட கனவு நனவாகும். யார் தடுத்தாலும் இலங்கையில் சுதந்திரமான தமிழீழம் அமைந்தே தீரும். இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக இலங்கை போரில் ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதை சித்தரித்து மே 17 இயக்கத்தினர் நாடகம் நடத்தி காட்டினர்.

Related Posts