மூலதன ஆதாய வரியை அறவிடுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கான சட்டமூலம் திருத்தப்பட்டு பாராளுமன்றத்தில் வெகு விரைவில் நிறைவேற்றப்படும். அந்த வகையில் நாட்டில் காணப்படுகின்ற வருமான ஏற்றத்தாழ்வை சமநிலைப்படுத்தவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
வரி எவ்வாறு என்ன அடிப்படையில் அமுல்படுத்தப்படும் என்பது குறித்து வரைவிலக்கணம் செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
மூலதன வருமான வரி என்பது பாரிய செல்வந்தவர்களிடம் இருந்து அவர்கள் அடையும் மூலதன வருமானத்தில் அறவிடப்படும் வரியாகும். இதனை மீண்டும் அமுல்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதாவது தற்போதுதான் இந்த சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்துள்ளோம். எனவே இது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றத்தில் திருத்தம் செய்யப்படும். அதன் பின்னர் வரி எவ்வாறு என்ன அடிப்படையில் அமுல்படுத்தப்படும் என்பது குறித்து வரைவிலக்கணம் செய்யப்படும்.
இதன்மூலம் மக்களின் வருமானம் ஏற்றத்தாழ்வின்றி பகிர்ந்து செல்வதற்கு இடமளிக்கப்படும். அரசாங்கம் வருமானம் குறைந்த மக்கள் மீது சுமையை சுமத்தாது. இவ் வரி அறவீட்டினால் சாதாரண நுகர்வோர்கள் எந்த விதத்திலும் பாதிக்கப்பட மாட்டார்கள். உற்பத்திச் செலவுகள் எதுவும் அதிகரிக்கப்பட மாட்டாது. கடந்த காலங்களில் அதிகளவில் வீதிகள் நிர்மாணிக்கப்பட்டது. இதனால் காணிகளின் பெறுமதி அதிகரித்தது. அதன் காரணமாக செல்வந்தர்கள் அதிக மூலதன இலாபத்தை அடைந்தனர். அவ்வாறு அதிகளவில் மூலதன இலாபம் அடைந்தவர்களிடமே வரியை அறவிடுகின்றோம். நாம் வாக்குறுதியளித்தபடி மக்களின் வருமானத்தில் ஏற்றத்தாழ்வு இடம்பெறாமல் இருக்கவே இவ்வாறான செயற்பாடுகளை முன்னெடுக்கிறோம் என்றார்.
அதன் பிரதிபலனாக வருமானம் பிரிந்து செல்லும் அளவு அதிகரித்தது. இதனை சரிசெய்யும் நோக்கில் முலதன ஆதாய வரி விதிப்பதற்காக பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான செயற்குழு இனங்கியுள்ளமையினால், அதனை சட்ட வரைபொன்றாக மாற்றுவதற்காக பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவை செயற்குழுவின் தலைவர் எனும் ரீதியில் பிரதமர் ரணில் விக்ரமவிங்க அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் மூலம் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.