மூன்று மீனவர்களை காணவில்லை

பருத்தித்துறை கடலுக்குள் நேற்று வெள்ளிக்கிழமை (28) அதிகாலை மீன்பிடிக்க சென்ற மூன்று மீனவர்களை காணவில்லையென மீனவரின் உறவினர்களால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் கூறினர்.

பருத்தித்துறை சக்கோட்டை பகுதியை சேர்ந்த பொன்ராசா நித்தியசீலன் (வயது 31), லூசியஸ் ஜெயபாலன் (வயது 28), செபமாலை றோபேர்ம் கெனடி (வயது 36) ஆகிய மூன்று மீனவர்களே காணாமற்போயுள்ளனர்.

இவர்களுடன் கடலுக்கு சென்ற மற்றய மீனவர்கள் கரைக்கு திரும்பியபோதும், ஒரு படகில் ஒன்றாக சென்ற இவர்கள் மூவரும் இன்னமும் கரைக்கு திரும்பவில்லை.

இதனையடுத்து, சக்கோட்டை மீனவ சங்கத்தின் இரண்டு மீனவ படகுகள் தேடுதல் நடத்தியும் காணாமற்போனவர்களை மீட்க முடியவில்லை. கடற்கொந்தளிப்பால் தேடுதலுக்கு சென்ற மீனவ படகுகளும் மீண்டும் கரைக்கு திரும்பி வந்துள்ளன.

கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் கடற்படையினருடைய உதவியுடன் தேடுதல் பணியை மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக பொலிஸார் கூறினர்.

மேற்படி 3 மீனவர்களும் பலாலி மற்றும் மயிலிட்டி பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து தற்போது தற்காலிகமாக சக்கோட்டை பகுதியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts