மூன்று மாதங்களுக்கு மழை நீடிக்கும்! உணவு தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்குமென்பதால் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சீரற்ற காலநிலையால் பாதிப்புக்குள்ளான மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி படிப்படியாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். வெள்ளநீர் வழிந்தோடும் நிலையில் வீடுகளைத் துப்புரவாக்கும் பணியில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் தமது தொண்டர்களை களமிறக்கியுள்ளது.

ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக கொழும்பில் நேற்று கொலன்னாவ, முல்லேரியா உள்ளிட்ட பகுதிகளில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்றன. வீடுகளும் சுத்தமாக்கப்பட்டன. தொற்றுநோய்களைத் தடுப்பதற்குரிய திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. அத்துடன், சேதவிவரங்களும் திரட்டப்பட்டு வருகின்றன.

அதேவேளை, சீரற்ற காலநிலையால் நாடளாவிய ரீதியில் சுமார் 25 ஆயிரத்து 880 ஏக்கர் விவசாய நிலப்பரப்பு முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. 102 குளங்கள் முழுமையாகவும், 92 குளங்கள் பகுதியாகவும் சேதமடைந்துள்ளன. ஆறுகளும் சேதமடைந்துள்ளன. இவற்றைப் புனரமைப்பதற்குரிய பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று விவசாயத்துறை அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்தார்.

“பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கப்படும். உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என்பதால், விவசாய உற்பத்திகளைத் துரிதமாக ஆரம்பிப்பதற்குத் தேவையான உதவிகள் வழங்கப்படும். இதற்காக விசேட செயலணியொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் அனர்த்தங்கள் ஏற்பட்டால், அதிலிருந்து விவசாயிகளையும், உற்பத்திகளையும் எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றி ஆராய்வதே இந்தக் குழுவின் நோக்கமாகும். விசேட தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்படும். அந்த இலக்கத்துடன் தொடர்புகொண்டு விவசாயிகள் தமக்கு ஏற்பட்ட நஷ்டம் குறித்து முறையிட முடியும். விவசாய காப்புறுதித் திட்டத்துக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது” என்றும் அமைச்சர் கூறினார்.

இதற்கிடையில் இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்குமென்பதால் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல், தென்மாகாணங்களில் இன்றைய தினமும் மழைபெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்கள அதிகாரி மொஹமட் சாலீஹிம் தெரிவித்தார்.

“தென்மேல் பருவப்பெயர்ச்சி காலநிலையில்தான் இலங்கையில் கூடுதல் மழைபெய்யும். எனவே, மேற்படி மாகாணங்களுக்குப் புறம்பாக ஏனைய பகுதிகளிலும் இடையிடையே இடியுடன்கூடிய மழைபெய்யக்கூடும். சிலவேளை, மூன்று நாட்கள் சீரான காலநிலை நிலவி அதன் பின்னர் மழைபெய்யக்கூடும்” என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

கடந்த சில நாட்களாக நிலவிய சீரற்ற காலநிலையால் 94 பேர் உயிரிழந்தனர். 21 ஆயிரத்து 600 கோடிக்கும் மேலாக இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

Related Posts