மூன்று மாகாணங்களுக்குமான தேர்தல் செலவு ரூபா 1500 மில்லியன்!

mahinda-deshpriyaஎதிர்வரும் வடக்கு, வடமேல், மத்திய மாகாணசபைத் தேர்தல்களை நடத்தி முடிக்க 1500 மில்லியன் ரூபா நிதி செலவாகும் என எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

மின் கட்டண உயர்வு, எரிபொருள் விலை உயர்வு என்பன காரணமாக இம்முறை தேர்தலுக்கு அதிக பணம் செலவிட நேரும் என அவர் சுட்டிக் காட்டினார்.

ராஜகிரிய தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஆகஸ்ட் 5ஆம் திகதி தொடக்கம் 31ஆம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறும் காலம் என்பதால் குறித்த காலத்தில் பாடசாலைகளுக்கு அருகில் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை மேற்கெள்வது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இசை நிகழ்ச்சிகளை நடாத்துதல், மாலை 5 மணிக்கு பின்னர் தேர்தல் பிரச்சார கூட்டங்களை ஏற்பாடு செய்தல் என்பன குறித்த காலத்தில் தடை செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 25ஆம் திகதி தொடக்கம் வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் ஆகஸ்ட் முதலாம் திகதி பகல் 12 மணியுடன் வேட்பு மனு ஏற்பு காலம் நிறைவு பெறும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தபால் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான காலம் ஆகஸ்ட் 02ஆம் திகதி 12 மணியுடன் நிறைவடையும் என அவர் கூறினார்.

2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதியன்று உறுதி செய்யப்பட்ட வாக்காளர் இடாப்பு படி குருணாகல் மாவட்டத்தில் அதிக தபால் மூல வாக்காளர்கள் பதிவாகியுள்ளதாகவும் அந்த வாக்காளர் இடாப்பு இம்முறையும் செல்லுபடியாகும் எனவும் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

அத்துடன் யுத்தம் முடிவடைந்து வடக்கில் தற்போதைய இயல்பு நிலையின் கீழ் முதலாவது தேர்தல் நடத்தப்படுவதாகவும் சர்வதேச கண்காணிப்பாளர்களுக்கு அனுமதி அளிப்பது குறித்து இதுவரை தீர்மானிக்கப்படவில்லை எனவும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.

Related Posts