மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்ட யாழ் கலாசார மண்டபம்!

இந்திய நிதியுதவியில் யாழ்ப்பாணத்தில் கட்டப்பட்டுள்ள யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் தற்போது மூன்றாவது முறையாக பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி குறித்த மண்டபம், யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பெயர் பலகை இன்றையதினம் பொருத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற அழிவு யுத்தம் நிறைவுக்கு வந்தபின்னர் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் புதுடில்லி சென்றிருந்த ஈழ மக்கள் ஜனநாய கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா, அன்று இந்தியாவின் ஆட்சியாளர்களாக இருந்த மன்மோகன்சிங் தலைமையிலான அரசிடம் விடுத்திருந்த கோரிக்கைகளான 50 ஆயிரம் வீட்டுத்திட்டம், 400 இற்கும் மேற்பட்ட விவசாய உழவு இயந்திரங்கள், 10 ஆயிரம் பாடசாலை மாணவருக்கான துவிச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பலதரப்பட்ட வரப்பிரசாதங்களுடன் இந்த கலாசார மத்திய நிலையத்தையும் கோரிப் பெற்றிருந்தார்.

இதைத்தொடர்ந்து அன்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஆட்சி அதிகாரத்திற்குட்பட்டிருந்த யாழ் மாநகர சபையில். அந்தச்சபைக்குரிய காணியில் யாழ் மாவட்ட கலாசாரங்களை மையப்படுத்தியதாக இந்திய அரசின் நன்கொடை மூலமாக நிர்மாணிக்கப்பட்ட “யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம்” 2023 ஆம் ஆண்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் இணைந்து திறந்து வைத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த 18 ஆம் திகதி இலங்கையின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி, இலங்கைக்கான இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்ட நிகழ்வில் அக்கட்டத்திற்கு “திருவள்ளுவர் கலாசார மையம்” என பெயர் சூட்டி பெயர் பலகையை திறந்து வைத்தனர்.

அதையடுத்து யாழ்ப்பாணம் கலாசார மத்திய நிலையம் என்ற பெயர் மாற்றப்பட்டு, திருவள்ளுவர் கலாசார மையம் என பெயர் சூட்டியமைக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள அரசியல்வாதிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் தமது கண்டனத்தை தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் இன்றையதினம் (24.01.2025) குறித்த கட்டடத்தில், யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என பெயர் பலகை பொருத்தப்பட்டுள்ளது.

Related Posts