மூன்றாவது நாளாக தொடரும் சுழற்சி முறையிலான போராட்டம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு முன்னாள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களின் போராட்டம் பதின்மூன்றாம் நாளகவும் தொடரும் அதேவேளை சுழற்சி முறையிலான உணவுத்தவிர்ப்பு போராட்டம் இன்று மூன்றாவது நாளை எட்டியுள்ளது.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இந்த நிலையில் 2012 ஆம் ஆண்டு வீடுகளுக்கு செல்வோம் என நம்பி வந்தபோதும் தமது வீடுகளில் இராணுவத்தினர் குடியிருந்ததாக மக்கள் தெரிவித்தனர்.

இதுமாத்திரமன்றி புதுக்குடியிருப்பு ஆதார வைத்தியசாலை நிர்வாகத்தினரால் மருத்துவ பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டதாக எமது பிராந்திய செய்தியளார் தெரிவித்தார்.

கடந்த 4 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொதுமக்களின் தொடர் போராட்டம் இன்று பதின் மூன்றாவது நாளாக தொடர்வதுடன், சுழற்சி முறையிலான உண்ணாவிரத போராட்டத்தையும் ஆரம்பித்துள்ளனர்.

புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களிற்கு சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தியே குறித்த போராட்டம் காணி உரிமையாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எனினும் கடந்த ஒன்பதாம் திகதி ஸ்ரீலங்கா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து தமது காணிகளை விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்ததுடன், தமது காணிகள் விடுவிக்கப்படும் வரை போராட்டம் தொடருமெனவும் மக்கள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts