“ஜனாதிபதித் தேர்தல் விவகாரத்தில் தேர்தல்கள் ஆணையாளரின் அதிகாரம் மீறப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தலை அறிவிக்கும் அதிகாரம் தேர்தல்கள் ஆணையாளருக்கு உரியது. இன்று இந்த அதிகாரம் மீறப்பட்டுள்ளது. இதேபோல் ஜனாதிபதித் தேர்தல் எப்போது நடைபெறும் என்பதை ஆணையாளரே தீர்மானிக்கவேண்டும். இப்போது அலரிமாளிகையில் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை தவறான செயற்பாடாகும்.”
இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியும், ஜே.வி.பியும் தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் நேற்று நேரில் தெரிவித்துள்ளன. “2010ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டவுடன் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தல் ஒன்றில் போட்டியிடுவதற்கான தகுதியை இழந்துவிட்டார்.
அதன் பின்னர் கொண்டுவரப்பட்ட 18ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மீண்டும் அவர் மூன்றாம் முறையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை. ஆகவே, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. அவ்வாறு போட்டியிடுவாராயின் அது அரசியல் அமைப்புக்கு முரணானதாகும்” என்றும் இக்கட்சிகள் தேர்தல்கள் ஆணையாளருக்கு விளக்கம் கொடுத்துள்ளன.
தேர்தல்கள் ஆணையாளரை ஐ.தே.க. மற்றும் ஜே.வி.பி. பிரதிநிதிகள் நேற்று முற்பகல் இராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் திணைக்களத்தில் தனித்தனியாகச் சந்தித்து பேச்சு நடத்தியிருந்தனர். இந்தப் பேச்சின்போதே இரு கட்சியினரும் மேற்கண்டவாறு தமது விசனத்தை எடுத்துக்கூறியுள்ளனர்.
நேற்றைய சந்திப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கரு ஜயசூரிய, கட்சியின் செயலாரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் மைக்கல் பெரேரா, ரவி கருணாநாயக்க ஆகியோர் பங்கேற்றனர். அதேவேளை,ஜே.வி.பியின் சார்பில் கட்சியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டனர்.