மூன்றாம் கட்டப் போராட்டம் ஆரம்பம் சி.வி.விக்கினேஸவரன்

vikneswaran‘தமிழ் மக்களாகிய நாம், கடந்த 1956ஆம் ஆண்டு தொடக்கம் ஜனநாயக முறைப்படி எமது உரிமைகளுக்காக போராடி வந்தோம். அது தோற்றுப்போனதை அடுத்து ஆயுதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதிலும் தோற்றுப்போன நிலையில், இப்போது எமது மூன்றாம் கட்டப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்’ தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளரும் முன்னாள் நீதியரசருமான சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.

‘ஆயுதப் போராட்டத்தினால் எமது பிரச்சினைகள் உலகறியச் செய்யப்பட்டுள்ளதால் எமது மூன்றாம்கட்டப் போராட்டம் மீண்டும் ஜனநாயக முறைப்படி, அதுவும் சர்வதேச நாடுகளின் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் தொடரப்போகிறது’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

வட மாகாணசபை தேர்தலில் போட்டியிடவுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்களுக்கான தேர்தல் தொடர்பிலான கலந்துரையாடல் ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை, கிளிநொச்சி, கரைச்சிப் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் சீ.வி.விக்னேஸ்வரன், ‘இலங்கை – இந்திய ஒப்பந்தமும் 13ஆவது திருத்தச் சட்டமும் மாகாணசபையும்’ என்ற தொனிப்பொருளில் உரையாற்றினார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர், ‘வடமாகாண சபைக்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கினால் தமிழ் மக்கள் பிரிந்து தனிநாடு அமைத்து விடுவார்கள் என்ற அச்சம் பெரும்பான்மையின மக்கள் மத்தியில் மேலோங்கி நிக்கிறது.

இவ்வாறு பிரிந்துபோக தமிழ் மக்களுக்கு இந்தியா உதவி செய்யும் என்ற எண்ணமும் அம்மக்கள் மத்தியில் வலுப்பெற்றுள்ளது. இதன் காரணமாக இலங்கை அரசாங்கம் சீனாவின் பக்கம் சாய்ந்துள்ளது. இந்த தேர்தலை பகிஸ்கரிப்பதால் சுயநல நோக்கம் கொண்டவர்களை தயக்கமின்றி அதிகாரப் பீடத்தில் ஏற்றிக்கொள்ள வழிவகுக்கும்’ என்றார்.

அத்துடன், ‘இலங்கை இந்திய ஒப்பந்தமானது இரண்டு நாடுகளுக்கிடையே ஏற்படுத்தப்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமாகும். இதனை வலுவற்றதாக்குவதற்கு தனியொரு நாட்டினால் மட்டும் முடியாது ஒப்பந்தங்கள் சார்பான வியன்னா மாநாட்டு முடிவுகள் இதனை வலியுறுத்துகின்றன.

அவ்வாறு ஒரு பன்னாட்டு ஒப்பந்தம் வழக்கொழியச் செய்யப்பட வேண்டுமானால் அது தொடர்பில் சம்மந்தப்பட்ட தரப்பாரின் கலந்தாலோசனையின் பின்னே அது மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘மாகாணசபை சட்டத்திற்கு மேலதிகமாக அதிகரப் பரவலாக்கலை மேலும் விரிவடையச் செய்ய 1994ஆம் ஆண்டு பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும் எதிர் தரப்பினரால் அது எதிர்க்கப்பட்டது.

அத்துடன் எமது இளைஞர்களிடையே நாட்டைப்பிரித்தல் என்ற குறிக்கோளும் இருந்த நிலையில் மேற்படி முன்னேற்றங்கள் எவையும் கருத்தில் எடுக்கப்படவில்லை. மாகாணசபைகளை நிறுவி பொலிஸ், காணி அதிகாரங்களை பிரயோகித்து.

தமிழ் மக்கள் பிரிந்து சென்று விடுவஷார்கள் என்ற அச்சம் சிங்கள மக்கள் மத்தியில் இருந்து வரு கின்றது. இவ்வாறு பிரிந்துபோக தமிழ் மக்களுக்கு இந்தியா உதவி செய்யும் என்ற எண்ணமும் வலுப்பெற்றுள்ளது. இதனாலேயே சீனாவை அரசாங்கம் நாடியிருக்கின்றது.

ஆனால் இவை தொடர்பான சட்டம் அவ்வாறான தனிப்பட்ட பொலிஸ் படையினை உருவாக்கி அதனூடாக தனிநாடு ஒன்றினை ஏற்படுத்த இடமளிக்க கூடும் என்பது பொய்.

ஏனெனில் அரசாங்கம் முதலில் பொலிஸ் ஆணைக்குழுவை நியமிக்கவேண்டும். அதன் பின்னர் இலங்கையின் பொலிஸ் அதிபர் மாகாண பொலிஸாரின் தலைவராக பிரதி பொலிஸ்மா அதிபரை நியமிக்கவேண்டும்.

எனவே மாகாணசபை பொலிஸ் படையினை அமைப்பது மத்திய அரசாங்கத்தின் அனுசரனையுடனேயே என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். மாகாண பொலிஸ்படை தான் தோன்றித்தனமாக நடந்துவிடக் கூடும் என்ற சந்தேகமும் பயமும் அஸ்திவாரமற்றவை.

எமது பாதுகாப்பை கருத்தில் கொண்டே மேற்படி பொலிஸ் அதிகாரம் மாகாணசபை சட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டது. 13ஆம் திருத்தச்சட்டத்தை நாம் பரிசீலித்துப் பார்க்கும்போது, மத்திய அரசாங்கத்தின் கையே மேலோங்கியுள்ளது. இங்கே சமஸ்டி கருத்துக்களுக்கு இடமில்லை.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் தம்மை தாமே ஆழும் நிலை என்பது வெகு தூரத்தில் இருக்கின்றது என்பதை தமிழ் மக்கள் ஏற்றுக்கொண்டாக வேண்டும்’ என அவர் தெரிவித்தார்.

‘எமது உரிமைக்கான போராட்டத்தில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த நாங்கள் சகல பிராயனத்தனங்களையும் மேற்கொண்டுள்ளோம் என்று சர்வதேசத்திற்கும் இந்தியாவிற்கும் காட்டுவது முக்கியமானதாக அமைகின்றது.

1956ஆம் ஆண்டு தொடக்கம் ஜனநாயக முறைப்படி எமது உரிமைகளுக்காக போராடி வந்தோம். அது தோற்றுப்போக இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தில் இறங்கினார்கள். அவர்களுக்கு எதிராக சர்வதேச நாடுகள் எழுப்பிய குற்றச்சாட்டு வடக்கு கிழக்கு பிரதேசத்தில் தமிழ் மக்களின் தலைமைத்துவத்தை பெற்றவர்கள் அல்ல என்பதேயாகும்.

இப்போது எமது மூன்றாம் கட்டபோராட்டம் ஆரம்பித்துள்ளோம். ஆயுதப் போராட்டத்தினால் எமது பிரச்சினைகள் உலகறியச் செய்யப்பட்டுள்ளதால் இந்த போராட்டம் மீண்டும் ஜனநாயக முறைப்படி ஆனால் சர்வதேச நாடுகளின் புரிந்துணர்வுடனும் ஒத்துழைப்புடனும் தொடரப் போகிறது’ என்றும் அவர் தெரிவித்தார்.

’13 ஆவது திருத்தச் சட்டத்தில் ஒன்றும் இல்லை நாங்கள் கூறுவதால் பயனேதும் இல்லை. இந்த தேர்தலை பகிஸ்கரிப்பதால் நாம் சுயநல நோக்கம் கொண்டவர்களை தயக்கமின்றி அதிகாரப் பீடத்தில் ஏற்றிக்கொள்ள வழிவகுக்கும். 13 திருத்தச் சட்டத்தை எமக்கு சாதகமாக நடைமுறைப்படுத்த முடியும் என்று சில சட்டவல்லுனர்கள் தெரிவித்துள்ளார்.

இதற்கு எமக்கு தேவையாக இருப்பது மக்களின் ஜனநாயக ஆதரவு இது ஆயுததாரிகளுக்கு இருக்கவில்லை என்று கூறும் சர்வதேச நாடுகளுகளுக்கு நாங்கள் மக்களின் ஆதரவைப் பெற்றவர்கள் என்பதைக் காட்டவேண்டிய தேவை இருக்கிறது’ என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Posts