சமூக வலைத்தலங்கள் ஊடாக இனவாதத்தை தூண்டுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை

சமூக வலைத்தலங்கள் ஊடாக இனங்கள் மற்றும் ஆகமங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் நோக்கில் பொய்யான மற்றும் வெறுக்கத்தக்க கருத்துக்களை பரப்பும் நபர்கள் மற்றும் குழுவினருக்கு எதிராக கடுமையாக சட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்பொருட்டு விஷேட பொலிஸ் குழுவொன்று அனுப்பப்பட்டுள்ளதாக, அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ள பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அண்மையில் நாரம்மல பகுதி ஹோட்டல் ஒன்றில் வழங்கப்பட்ட உணவுப் பொதியில் குழந்தை பிறக்கச் செய்யாதிருக்க பயன்படுத்தும் மருந்து இருந்ததாக, சமூக வலைத்தலங்கள் ஊடாக செய்தி வௌியிடப்பட்டது.

இதனையடுத்து, இந்த விடயம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அந்த செய்தி முற்றிலும் பொய்யானது என தெரியவந்துள்ளது.

இதன்படி, குறித்த பொய் பிரச்சாரத்தை மேற்கொண்ட நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்த தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதேவேளை, தமது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இனங்களுக்கு இடையில் பேதங்களை ஏற்படுத்தும் வகையிலான செயற்பாடுகள் இடம்பெறின் அனைத்து பொறுப்பும் அந்தந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகலே ஏற்க வேண்டும் என, பொலிஸ் மா அதிபரால் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இதுபோன்ற நிலைமைகளை தவிர்க்க அனைத்து பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், பிரிவுக்குப் பொறுப்பான அதிகாரிகள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் மிகவும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் எனவும் அனைத்து பொலிஸாருக்கும் அறிவிக்கும் வகையில் சுற்றறிக்கையும் பொலிஸ் மா அதிபரால் வௌியிடப்பட்டுள்ளது.

Related Posts