மு.அ. டக்ளஸ் தேவானந்தா என்றால் முதுகெலும்பில்லாத அடிமை என்று நான் சொல்ல வரவில்லை. முக்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா என்றே கூறுகின்றேன்.இந்த அரசும் – அரசுடன் சேர்ந்திருக்கின்ற மேற்படி மு.அ,களும் – தம்மை தமிழர் உரிமைக்காக போராடுபவர்களாக காட்டிக்கொண்டு தமிழர்களின் உரிமைகளை மறைத்தும் – மறுத்தும்தான் – பேசுவார்கள் .” – இவ்வாறு கொழும்பில் இருந்து இயங்கும் காட்சி ஊடகம் ஒன்றில் தெரிவித்திருக்கிறார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன்.
வடக்கு மாகாணத்துக்கு வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து வலம் வந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சியில் பேசியபோது மு.விக்னேஸ்வரன் என்று விளித்திருந்தார். அத்துடன் மு.விக்னேஸ்வரன் என்றால் முட்டாள் விக்னேஸ்வரன் என்று அர்த்தமல்ல முதலமைச்சர் விக்னேஸ்வரன் என்பதே என்றும் வியாக்கியானம் செய்திருந்தார்.
இந்த விடயம் குறித்துக் கருத்துத் தெரிவிக்கையிலேயே சிறிதரன் எம்.பி. மேற்சொன்ன கருத்தைத் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்:-
வடக்கு மாகாண சபையை சரியான ஆட்சி அதிகாரம் கொண்ட சபையாக நாம் கருதவில்லை. எனினும் மக்களின் ஆணையுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தச் சபையில் ஆட்சி அமைத்திருக்கின்றது.
ஆனால் இங்கு தமிழர்களின் ஆட்சியை விரும்பாதவர்கள் விமர்சிக்கின்றனர். குறிப்பாக வடக்குக்கு வந்த ஜனாதிபதியும் விமர்சித்தார். இதன்போது கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களையும் செய்தார்.
இதேபோன்று மு.அ. டக்ளஸ் தேவானந்தாவும் விமர்சித்திருக்கிறார். மு.அ.டக்ளஸ் தேவானந்தா என்று நான் கூறியமை முதுகெலும்பில்லாத அடிமை என்று நான் சொல்ல வரவில்லை. முக்கிய அமைச்சர் என்றே கூறினேன்.
இப்படிப்பட்ட மு.அ .ஆக்கள் தமிழர்களின் உரிமைகளை மறுத்துத்தான் கதைப்பார்கள் இவர்களால் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியுமா. இவர்களும் முன்னர் தமிழீழத்தையே கேட்டனர் பின்னர் ‘மத்தியில் கூட்டாட்சி – மாநிலத்தில் சுயாட்சி’ என்றனர். இப்போது அதுவும் இல்லை.
இந்நிலையில் இன்று அரசிடம் எதுவும் கேட்க முடியாமல் அரசு கொடுப்பதையும் கூறுவதையுமே வாங்கும், கேட்கும் நிலையில் கூனிக் குறுகி அரசுக்கு ஆலவட்டம் எடுக்கின்றார்கள் .
எமது மக்களால் நிராகரிக்கப்பட்ட இத்தகைய மு.அ . குழுக்களை வைத்துக் கொண்டு எங்களை நசுக்குவதற்கு அரசு திட்டம் தீட்டிச் செயற்படுகின்றது.”- என்றார்.