முஸ்லிம் மாணவிகள் கலாசார உடையுடன் தேர்வு எழுத அனுமதி?

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தர தேர்வு எழுதவிருக்கும் முஸ்லிம் மாணவிகளைத் தங்கள் கலாசார ரீதியான சீருடையுடன் தேர்வு எழுதுவது தொடர்பாக, எவ்விதமான பிரச்சினைகளும் ஏற்படாமல் இருப்பதை மத்திய கல்வி அமைச்சகம் உறுதிப்படுத்த வேண்டும் என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை உள்ளிட்ட இஸ்லாமிய அமைப்புகள் கோருகின்றன.

இது தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் செயலாளர் எம்.எம்.ஏ முபாரக், மத்திய கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திற்கு அவசர கடிதமொன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

இலங்கையில் பல்கலைக்கழக உயர் கல்விக்கான அனுமதியைத் தீர்மானிக்கும் க.பொ.த உயர்தர பரீட்சை எதிர்வரும் 8-ஆம் திகதி தொடக்கம் செப்டம்பர் 2-ஆம் திகதி வரை நடைபெறுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொது தராதரப் பத்திர சாதாரண தேர்வு எழுதிய முஸ்லிம் மாணவிகள், சில தேர்வு நிலையங்களில் இது தொடர்பாக எதிர்கொண்ட நெருக்கடி நிலை காரணமாகவே இந்தக் கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது.

ஆள் அடையாளம், தேர்வு எழுதும் முன்னர் மேற்பார்வையாளரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் எழுதி முடியும் வரை தேர்வு எழுதுபவர் அவ்வாறே இருக்க வேண்டும் என ஆள் அடையாளம் தொடர்பாக அரசு தேர்வு ஆணையாளரின் சுற்றறிக்கை கூறுகின்றது.

இந்த சுற்றறிக்கை காரணமாகவே தங்களின் கலாசார ரீதியான சீருடையுடன் அதாவது ஹிஜாப் மற்றும் பர்தா அணிந்து தேர்வுக்கு சமூகமளித்திருந்த முஸ்லிம் மாணவிகள், சில மையங்களில் சிரமங்களை எதிர்கொண்டனர்.

குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்திய சந்தர்ப்பங்களில், அவர்கள் தலையில் அணிந்துள்ள ஸ்கார்ப் அகற்றப்பட்டு, தேர்வு எழுதி முடிக்கும் வரை அவற்றை மீண்டும் அணிய அனுமதிக்கப்படாமல், அதை அணியாமல்தான் தேர்வு எழுத வேண்டும் என்று சில மையங்களில் முஸ்லிம் அல்லாத தேர்வு மேற்பார்வையாளர்களால் கட்டாயப்படுத்தப்பட்டதாக அவ்வேளை புகார்களும் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து எழுந்தன

அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சை தொடர்பாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ முபாராக் மத்திய கல்வி அமைச்சருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில், கடந்த வருடம் சில தேர்வு மையங்களில் தங்கள் கலாசார ரீதியான சீருடையில் பரீட்சை எழுத முஸ்லிம் மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருக்கிறார்.

“எதிர்பாரத அந்நடவடிக்கை காரணமாக அம்மாணவிகள் உள ரீதியாக பாதிப்புகளை எதிர் கொண்டனர். தேர்வுப் பெறுபேறுகளில் எதிர்பார்த்த அளவுக்கு பெறுபேறுகளை அவர்களால் அடையமுடியவில்லை” எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள க.பொ.த உயர்தர பரீட்சையில், இதுபோன்ற அசௌகரியங்கள் ஏற்படாமல் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்,” என்றும் அக்கடிதத்தில் கல்வி அமைச்சரிடம் வலியுறுத்தி கேட்கப்பட்டுள்ளது.

Related Posts