முஸ்லிம் மக்களை ஏமாற்றிய ரவூப் ஹக்கீம் அதன் விளைவை கூடிய விரைவில் அனுபவிப்பார்!- இரா.சம்பந்தன்

நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களை ஏமாற்றி, தமது சுயநலத்துக்காகவும் சுயலாபத்திற்காகவும் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இதன் விளைவை வெகு விரைவில் அனுபவிப்பார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த முடிவு தொடர்பாக கருத்துத் தெரிவிக்கையிலேயே சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.  அவர் தொடர்ந்து கூறுகையில்,

கிழக்கு மாகாண மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளையும், மக்கள் வழங்கிய ஆணையினையும் முஸ்லிம் காங்கிரஸ் உதாசீனம் செய்து சுயநலமாக செயற்பட்டுள்ளது. இதன்மூலம் முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்.

தேர்தல் முடிவடைந்த பின்னரும் முஸ்லிம் மக்கள் பல விடயங்களை வலியுறுத்தி வந்தனர். அந்த மக்களின் ஆணைக்கு மாறாக, விருப்பத்திற்கு மாறாக முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமும் கட்சியும் சுயநலமாக நடந்துகொண்டிருக்கிறது.

இவ்விடயத்தில் நாங்கள் ஏமாற்றமடையவில்லை. பல விடயங்களை எதிர்பார்த்துத்தான் நாங்களும் இருந்தோம். ஆனால், முஸ்லிம் காங்கிரஸை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள்.

முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமும் அவரது கட்சியின் ஏனைய வேட்பாளர்களும் அரசாங்கத்தை விமர்சித்து, தனித்து போட்டியிட்டதால்தான் இவ்வளவு ஆசனங்களையேனும் பெறமுடிந்தது.

தமது தனித்துவ கட்சியின்மீது கொண்டிருந்த நம்பிக்கையினால்தான் முஸ்லிம் மக்கள் ஈடுபாட்டுடன் வாக்களித்தனர் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் மறந்துவிடக்கூடாது.

மக்களின் ஆணையை புறந்தள்ளி முடிவெடுத்துவிட்டு, முஸ்லிம் மக்களின் நலன்கருதியே அவ்வாறு செயற்பட்டதாக ஹக்கீம் கூறியிருக்கிறார். இது நலன்கருதிய தீர்மானமல்ல, சுயநலமான தீர்மானமாகவே எங்களுக்குப்படுகிறது.

தங்களுடைய சொந்த தேவைகளுக்காகவும் பதவிகளுக்காகவுமே அவர்கள் இப்படி நடந்துகொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

பேரம் பேசும் சக்தி பற்றி முஸ்லிம் காங்கிரஸ் அதிகமாக பேசியது. ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக செயற்பட்டு அவர்களின் நலனுக்காக பாடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு 11 ஆசனங்கள் கிடைத்தன. எங்களை நம்பி வாக்களித்த தமிழ் மக்களின் நலனுக்காகத்தான் இப்பொழுதும் பொறுமை காத்திருந்தோம்.

ஆனால், முஸ்லிம் மக்களை ஏமாற்றி அவர்களின் வாக்குகளை பறித்துக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸ் எதனை வைத்து பேரம் பேசுகிறது என்று புரியவில்லை.

தமிழ், முஸ்லிம் மக்கள் என்ற கூட்டான தமிழ் பேசும் மக்களின் அதிகாரங்களுக்காக, தமிழ்பேசும் மக்களின் பிரதேசங்களில் தமிழ்பேசும் தலைமை இருக்க வேண்டும் என்பதற்காக முஸ்லிம் காங்கிரஸுக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுப்பதற்கும் நாங்கள் தயாராக இருந்தோம்.

ஆனால், அதனைக்கூட தட்டியொதுக்கி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒருவருக்கு முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்திருக்கிறார் ஹக்கீம். இதுதான் அவரது பேரம் பேசும் திறமையா?

கட்சியை நம்பி வாக்களித்த முஸ்லிம் மக்களை ஏமாற்றி, சுயநலத்துக்காகவும் சுய லாபத்திற்காகவும் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் இதன் விளைவை வெகு விரைவில் அனுபவிப்பார் என்பதை மட்டும் என்னால் உறுதியாகக் கூற முடியும். என்றார் சம்பந்தன்.

நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் அப்போது முஸ்லிம் காங்கிரஸ் ஏற்றுக்கொள்ள வேண்டும்!- த.தே.கூ

நாங்களும் ஒருநாள் வருத்தம் தெரிவிப்போம் அப்போது அதனை முஸ்லிம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ளவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

அரசாங்கத்துடன் இணைந்து கிழக்கு மாகாணசபையில் ஆட்சியமைத்ததை இன்றையதினம் பகிரங்கமாக ஊடகங்களில் அறிவித்த முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சினேகபூர்வமான அழைப்பினை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாமல் போனதையிட்டு நான் உளபூர்வமான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கின்றேன். என்று கூறியது சம்பந்தமாக கேட்டபோதே இவ்வாறு பதிலளித்தார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

முஸ்லிம் காங்கிரஸின் இந்த முடிவு நாங்கள் ஏற்கனவே எதிர்பார்த்த விடயம்தான் ஏனெனில் தமிழர்களின் உரிமைப் போராட்ட வரலாற்றில் அஸ்ரப்பிற்கு பின்னர் எந்த முஸ்லீம் தலைமைகளும் தமிழர்களுடன் இணைந்து செயற்பட்ட வரலாறு கிடையாது.

முஸ்லிம் கட்சிகளுக்கேயான தனித்துவம், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தனித்துவம் என்பது வேறு. முஸ்லிம் கட்சிகளின் தனித்துவம் என்பது வேறு நாங்கள் எங்களுடைய மக்களின் தன்னாட்சி, சுயநிர்ணய உரிமை பெற்று எங்களுடைய தாயகத்தை நாங்களே ஆட்சிசெய்ய வேண்டும் என்பதற்காக கடந்த 60ஆண்டுகளுக்கு மேல் போராடிவரும் இனம்.

ஆனால் முஸ்லிம் தலைமைகளோ தங்களது இன மானத்தையும், உரிமைகளையும், நிலத்தையும் அரசாங்கத்திடம் அடகு வைத்து காலாகாலமாக சலுகைகளை பெற்றுவந்த இனம். முஸ்லிம் தலைமைகள், தமிழர்களின் போராட்டத்தை பார்த்து தன்மானத்தை கற்றுக் கொண்டார்களே தவிர இயல்பாக அவர்களுக்கு போராடும் குணமோ அல்லது தனித்துவமோ கிடையாது. அதைத்தான் இன்று மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் செய்துள்ளது.

எனவே அவர்கள் எங்களுடன் இணையமாட்டார்கள். எங்களைப் பொருத்தமட்டில் இது புதிய விடயமில்லை. தமிழர்களின் அரசியல் வரலாற்றில் இதுபோன்ற எத்தனையோ சம்பவங்கள் நடந்துள்ளது. அவற்றையெல்லாம் தாண்டியே இன்றும் தமிழர்களின் உரிமைப் போராட்டம் தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

தமிழ் மக்களுக்கான உரிமையை பெறும் வரைக்கும் எங்களது போராட்டம் தொடரும் அதற்கான ஆணையை கிழக்கு மாகாண மக்கள் எங்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

கிழக்கு மாகாண சபையில் அரசுடன் இணைந்து வெற்றிபெற்ற முன்னாள் முதலமைச்சர் கூட இன்று அரசாங்கத்தால் தூக்கியெறியப்பட்டுள்ளார். எனவே அரசாங்கத்தை பொறுத்தமட்டிலும் சரி, முஸ்லிம் காங்கிரசை பொருத்தமட்டிலும் சரி தமிழர் ஒருவர் இம்முறை முதலமைச்சராக வரக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்கள்.

அதை அவர்கள் செய்து காட்டியுள்ளார்கள் இதற்கான பொறுப்பை அரசாங்கத்திற்கு வாக்குச்சேர்த்து கொடுத்த தமிழ் தலைமைகளே ஏற்கவேண்டும்.

எங்களை பொருத்தமட்டில் மாறிவரும் சர்வதேச ஒழுங்குமுறைக்கு ஏற்ப நாங்களும் ஒருநாள் முஸ்லிம் காங்கிரசிடம் வருத்தம் தெரிவிப்போம். அப்போது அதனை முஸ்லீம் காங்கிரஸ் தலைமை ஏற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

Related Posts