முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் கூட்டமைப்புக்கு அமைச்சர் டளஸ் பகிரங்க அழைப்பு

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பவும், கிழக்கை மேலும் அபிவிருத்தி செய்யவும் எம்முடன் ஒன்றுபடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன் என்று அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

குளியாப்பிட்டியில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

இப்போது தேர்தல் முடிந்து விட்டது. இந்த நாட்டில் சிங்களவர், தமிழர், முஸ்லிம் என மீண்டும் பிரிந்து செயற்பட முடியாது. தேசிய நல்லிணக்கம் மிக மிக இன்றியமையாத ஒன்றாகும். அதனைக் கட்டியெழுப்புவதற்குரிய சிறந்த இடமாக கிழக்கு மாகாணம் விளங்குகின்றது.

தேர்தல் காலத்தில் சில அரசியல் கட்சிகள் இன வாதத்தையும், மதவாதத்தையும் தூக்கிப் பிடித்தன. ஆனால் ஜனாதிபதி, “இனவாதம் வேண்டாம். மதவாதம் வேண்டாம் தேசிய ரீதியாக சிந்தித்து எல்லோரையும் ஒன்றுபடுமாறு கேட்டுக் கொண்டார்.

மாகாண சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தேர்தல் நடைபெறும் தினம் வரையான 67 நாட்களிலும் நாம் தேசிய நல்லிணக்கத்தையே பரவலாக வலியுறுத்தினோம்.

இப்போது தேர்தல் முடிந்து விட்டது. தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் நான் பகிரங்கமாக அழைப்பு விடுக்கின்றேன்.

தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்காகவும், கிழக்கை மேலும் அபிவிருத்தி செய்வதற்காகவும் எம்முடன் ஒன்றுபட்டு கைகோர்க்க வேண்டும்.

அதேநேரம் 2005ம் ஆண்டு முதல் நடந்து முடிந்த மாகாண சபைகளுக்கான தேர்தல் வரையும் நடாத்தப்பட்ட  பத்து தேர்தல்களிலும் ஐ.ம.சு. முன்னணியே அமோக வெற்றி பெற்று சாதனை படைத்து இருக்கின்றது குறிப்பிடத்தக்கது.

Related Posts