முஸ்லிம் மாணவர்களின் தாய்மார், முகத்தை மூடாமல் முஸ்லிம் கலாசார உடைகளுடன் பாடசாலை வளாகத்திற்குள் நுழைவதற்கு பாடசாலைகள் அனுமதி வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளுக்கே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதுடன் மக்கள் நியாயமான முறையில் நடந்து கொள்வதை காண விரும்புவதாகவும் கூறியுள்ளது.
முஸ்லிம் பெற்றோர், ஹிஜாப் அணிந்து பாடசாலை வளாகத்திற்குள் வருவதற்கு ராஜகிரிய, ஜனாதிபதி பாலிகா வித்தியாலய நிர்வாகம் அனுமதிக்காமையை எதிர்த்து, அவர்கள் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு உட்படுத்திய போதே உயர்நீதிமன்றம் மேற்கண்டவாறு உத்தரவிட்டுள்ளது.
இந்த மனுக்கள், பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையிலான நீதியரசர்களான கே.ஸ்ரீபவான், பிரியந்த ஜயவர்த்தன ஆகியோர் கொண்ட குழுவின் முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்த கட்டளையானது பெற்றறோருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் பாடசாலை பிள்ளைகளுக்கு பொருந்தாது என்றும் உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அத்துடன், பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்ட சட்டங்களுக்கு அமைந்து நடக்கவேண்டும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, ஹிஜாபை பாடசாலைக்கு அணிந்து வரக்கூடாது என்று தனக்கு ராஜகிரிய, ஜனாதிபதி வித்தியாலய அதிபரால் கொடுக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து அந்த வித்தியாலயத்தில் பயிலும் 11 வயது மாணவியான பாத்திமா ஹகீனாவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார்.
அந்த மனுவில், வித்தியாலயத்தின் அதிபர் தக்சல நயன பெரேரா, பிரதி அதிபர் ஹேமமாலி, 7ஆம் ஆண்டு வகுப்பாசிரியை திருமதி நடோதுன்ன ஆகியோருடன் மாகாண கல்வி பணிப்பாளர், கல்வியமைச்சர் மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
அந்த மாணவி தனது மனுவில் பாடசாலை அதிபரால் தான் தீவிரமான மனக்கஷ்டங்களுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தனது சமய ஆசார முறைப்படி அணியும் ஆடையை அணியக்கூடாது என்று நிர்ப்பந்திக்கப்பட்டதாகவும் மேலும் இந்த அதிபர், முஸ்லிம் மாணவிகளுக்கும் அவர்களது பெற்றோருக்கு எதிரான மனேநிலையில் உள்ளவர் என்றும் தெரிவித்திருக்கிறார்.
வித்தியாலய அதிபரின் இந்த நிலைப்பாடு கல்வி அமைச்சினால் டிசெம்பர் 12ஆம் திகதி அனுப்பப்பட்ட சுற்று நிருபத்துக்கு எதிரானது என்றும் தெரிவித்திருக்கிறார். இந்த சுற்று நிருபத்தின்படி எல்லா தேசிய, மாகாண, தனியார் பாடசாலைகளில் கல்வி பயிலும் முஸ்லிம் மாணவிகள், தங்கள் சமய ஆசாரத்திற்கு அனுசரணையான பாடசாலை உடையை அணிந்து வரலாம் என்று கல்வி அமைச்சில் செயலாளரால் கூறப்பட்டிருக்கிறது என்றும் அம்மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மற்றுமொரு அடிப்படை உரிமை மீறல் மனு ஓகஸ்ட் மாதம் 4ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவிருக்கின்றது.