தெற்கில் முஸ்லிம்கள் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் கண்டு வருவதினைப் பொறுக்க முடியாத பெரும்பான்மையினத்தவர் முஸ்லிம்களை அடித்துத் துரத்தப் பார்க்கின்றார்கள்’ என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சனிக்கிழமை (28) தெரிவித்தார்.
யாழ்.வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு சனிக்கிழமை (28) கல்லூரி பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
‘அந்தக் காலத்தில் தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கி அரச உத்தியோகங்களில் பெருமளவான இடங்களைக் கைப்பற்றியிருந்தனர்.
அதனாலேயே 1958 ஆம் ஆண்டுகள் தொடக்கம் தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் வெடித்து வந்து 1983 இல் பெரும் கலவரமாக இடம்பெற்றது.
வடக்கு கிழக்கு மாணவர்கள் உயர்கல்வியின் பின்னர் மேலைத்தேய நாடுகளுக்குச் சென்று குடியேறவேண்டும் என்ற எண்ணங்களைக் கைவிடவேண்டும்.
நாங்கள் அதிகளவில் மேலைத்தேய நாடுகளுக்குச் சென்றால் அங்குள்ளவர்களின் உள்நாட்டுத் தொழில் வாய்ப்புக்கள் பாதிப்படையும். அவ்வாறு நடந்தால் அங்கு போய்க் குடியேறிய எம்மவர்கள் மீதுதான் அந்த நாட்டவர்களுக்கு கோபம் அதிகமாகும்.
தற்போது தெற்கில் எவ்வாறான கோபப் பிரதிபலிப்புக்கள் காணப்படுகின்றனவோ அதேபோல் வெளிநாட்டில் இருக்கும் எம்மவருக்கும் ஏற்படும்.
போரினால் பாதிப்படைந்துள்ள எமது சமூகத்தினை முன்னேற்றுவதற்காக மாணவர்கள் சமுதாயம் எமது பிரதேசங்களிலிருந்து அபிவிருத்திகளை மேற்கொள்ள வேண்டும்’ என அவர் மேலும் தெரிவித்தார்.