முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தினை துரிதப்படுத்துமாறு யாழ் மாநகர சபை உறுப்பினர் சுபியான் கோரிக்கை விடுத்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
“8,000 ற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மீள்குடியேற்றத்திற்கு தயாராக இருக்கின்றார்கள். கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் மாவட்டங்களில் 2,834 பேர் மீள்குடியேற்றத்திற்காக பதிவுகளை மேற்கொண்டுள்ளதாக பிரதேச செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் 2,000 பேர் பதிவு செய்துள்ளதாகவும் 1,995 பேர் தற்போது யாழில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது யாழில் மீள்குடியேறியுள்ள மக்களுக்கு எதிர்பார்த்த வசதிகள் செய்துகொடுக்கப்படாத நிலையிலேயே அவர்கள் வாழந்து வருகின்றனர்.
யாழில் மீள்குடியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களையும் இந்திய வீட்டுத் திட்டத்தில் உள்ளவாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை 2010ஆம் ஆண்டு விடுக்கப்பட்டது. இதற்கமைய யாழ். மாவட்டத்தில் முன்றாம் கட்ட இந்திய வீட்டுத் திட்ட பணியில் நான்கு முஸ்லிம் கிராமங்கள் உள்வாங்கப்பட்டுள்ளன.
அத்துடன் தற்போது முஸ்லிம் மக்கள் மத்தியில் காணி பிரச்சனை பெரும் பிரச்சனையாக இருக்கின்றது. முஸ்லிம்களுக்கு சொந்தமான பகுதியில் கண்னிவெடி அகற்றும் நிறுவனம் ஒன்று மண்ணை கொண்டு வந்து கொட்டியுள்ளதால் பொதுமக்களின் காணிகள் அடையாளம் காண முடியாத நிலை காணப்படுகின்றது.
இந்த காணியில் உள்ள மண்ணை அகற்றினால் காணி உரிமம் உள்ள முஸ்லிம் மக்களுக்கு இந்திய வீட்டுத்திட்டம் பெறும் வசதி ஏற்படும். இதனை மாவட்ட செயலாளர் கவனத்தில் எடுத்து உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்” என்றார்.