முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றி!

நேற்று (25) செவ்வாய்க்கிழமை இலங்கையின் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டம் முழுமையான வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

இதற்கு ஆதரவளித்த அனைவருக்கும் இந்தப் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்த, தமிழ்த் தேசியப் பரப்பில் அரசியல் பணியாற்றிவரும் ஏழு கட்சிகளும் கூட்டாக தமது நன்றிகளைத் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அவை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையின் விபரம் வருமாறு :

இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களின் கலாசாரம் பண்பாடு, மற்றும் அவர்களது புராதான சின்னங்களை அடித்தொழித்து அவ்விடங்களில் புத்தகோயில்களைக் கட்டி, பௌத்த சமய திணிப்பை ஏற்படுத்துவதற்கு எதிராகவும் இலங்கை அரசாங்கம் கொண்டுவர உத்தேசித்துள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராகவும் தமது எதிர்ப்பை முழுமையாகப் பதிவு செய்யவும் தமது கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்ளவும் வட- கிழக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இத்தகைய மிலேச்சத்தனமான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தக்கோரியும் வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற தமிழ், முஸ்லிம் மக்கள் ஒன்றுபட்டு நடத்திய பொதுமுடக்கமானது முழுமையாக வெற்றியடைந்துள்ளது.

தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய ஏழு கட்சிகள் ஒன்றிணைந்து முழுமுடக்கத்திற்கான கோரிக்கையை முன்வைத்திருந்தனர். இதற்கு ஆதரவாக முஸ்லிம் கட்சிகளும் எம்முடன் கைகோர்த்திருந்தனர். மேலும், இந்தக் கோரிக்கைக்கு ஆதரவாக வட – கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள், தொழிற்சங்கங்கள், பொது அமைப்புகள், போக்குவரத்து நிறுவனங்கள், வர்த்தக சங்கங்கள் போன்ற அனைவரும் ஒன்றிணைந்து இந்த பொதுமுடக்கம் வெற்றிபெற தமது முழுமையான ஒத்துழைப்பை நல்கினார்கள். புலம்பெயர் நாடுகளில் வாழ்கின்ற தமிழ் அமைப்புகளும் இலங்கையில் இருக்கின்ற மத நிறுவனங்களும் ஒன்றுபட்டு இந்தக் கண்டன நடவடிக்கைக்கு ஆதரவளித்திருந்தார்கள்.

இந்த முடக்கத்தைத் தடுப்பதற்கு அரசாங்கம் பல வழிகளிலும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இவை அனைத்தையும் நிராகரித்து கோரிக்கையின் முக்கியத்துவத்தை உணர்ந்துகொண்ட தமிழ் முஸ்லிம் மக்கள் அதற்குத் தனது உணர்வுபூர்வமான முழுமையான ஒத்துழைப்பை நல்கினார்கள். வட – கிழக்கை முழுமையாக ஸ்தம்பிதம் அடையச்செய்து மக்கள் தமது உணர்வை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள். அரசாங்கம் தமிழ் மக்களின் நியாயங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அரசாங்கத்தின் பல்வேறு திணைக்களங்களினூடாக புராதான சின்னங்களை அழிப்பது, அந்த இடங்களில் புராதானச் சின்னங்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக புதிய புத்தகோயில்களைக் கட்டுவது, சைவக் கோயில்களை இடித்தழிப்பது போன்ற அனைத்து நடவடிக்கைகளையும் இனியாவது நிறுத்த வேண்டும்.

அதேபோன்று இந்த நாட்டிற்கு பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு, அதனைக் கைவிடுவதுடன், இப்பொழுது உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டமும் நீக்கப்படவேண்டும். தமிழ் மக்களின் இவ்வலுவான கோரிக்கைகளை ஜனாதிபதி மாத்திரமல்லாமல், இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளும் தமிழ்பேசும் மக்களின் போராட்டத்தின் நியாயத்தினை உணர்ந்து, இவற்றைத் தீர்ப்பதற்கு தமது முழுமையான ஒத்துழைப்பைத் தரவேண்டும்.

இந்தப் போராட்டத்திற்காக மக்களைச் சந்தித்து அதற்கான தயாரிப்பு வேலைகளை மேற்கொண்டிருந்தபொழுது, முழு மக்களும் மனப்பூர்வமாக ஒத்துழைத்து, முழுமுடக்கப் போராட்டம் பூரண வெற்றியடைய தமது பூரண ஆதரவினை வழங்கியிருந்தார்கள். வடக்கு – கிழக்கில் வாழ்கின்ற சிங்கள மக்களும்கூட தமது கடைகளையும் வர்த்தக நிறுவனங்களையும் மூடி தமது முழுமையான ஆதரவினை வழங்கியமைக்காக நாம் அவர்களுக்கு சிறப்பாக நன்றிகளையும் வாழ்த்துகளையும் கூறிக்கொள்கிறோம்.

அரசாங்கத்தின் ஒடுக்குமுறையும் அடக்குமுறையும்தான் வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்பட்ட முழுமுடக்கப் போராட்டத்தின் முழுமையான வெற்றிக்கு வழிவகுத்தது.

வடக்கு – கிழக்கில் முழு முடக்கப் போராட்டம் அறிவித்தவுடன், வடக்கு – கிழக்கில் சிங்கள பௌத்தமயமாக்கல் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை என்றும் அது ஒரு தவறான கருத்து என்றும் ஜனாதிபதி ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.

நாம் ஜனாதிபதியிடம் கேட்பதெல்லாம், தமிழ் சைவ மக்கள் தமது ஈமைக்கடமைகளைச் செய்யும் கன்னியா வெந்நீரூற்றை பௌத்த பிக்குகள் தம்வசம் வைத்திருப்பது தவறான செய்தியா? நீதிமன்ற உத்தரவையும் மீறி குருந்தூர் மலையில் புத்த கோயில் கட்டப்படவில்லையா? வெடுக்குநாரி மலையில் இருந்த ஆதிசிவன் சிவலிங்கத்தை உடைக்கவில்லையா? வடக்கு – கிழக்கின் பல பிரதேசத்தில் தொல்பொருள் இடங்கள் என்ற பெயரில், எமது கோயில்கள், எமது பிரதேசங்களை நீங்கள் அபகரிக்கவில்லையா? ஆகவே, நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகிய நீங்கள் இவை அனைத்தையும் உடனடியாக நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். இதற்குரிய நடவடிக்கைகளை நீங்கள் எடுக்காமல் நீங்கள் கண்டுகொள்ளாமல் இருப்பீர்களாக இருந்தால், தமிழ் பேசும் மக்களை நீங்கள் ஒரு தொடர் போராட்டத்திற்கு அழைக்கின்றீர்கள் என்பது அர்த்தமாகும்.

இந்த பொது முடக்கத்திற்கு ஒத்துழைத்த அனைத்து மக்களுக்கும் மீண்டும் ஒருமுறை நன்றிகூறிக்கொள்கின்றோம் என்றுள்ளது.

Related Posts