முழுப் பூசனிக்காயைச் சோற்றினுள் மறைக்கிறார் அரச அதிபர்; சோ.சுகிர்தன்

sugirthan_tellippalaiமீளக்குடியமர வேண்டியோரின் விவரங்கள் தன்னிடம் இல்லை என்று யாழ். மாவட்ட அரச அதிபர் கூறுவது, “முழுப் பூசனிக்காயைச் சோற்றினுள் மறைப்பதற்கு ஒப்பானது.இவ்வாறு வலி. வடக்கு பிரதேச சபையின் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்தார். வலி.வடக்குப் பிரதேச செயலகத்தில் கடந்த வருடம் செப்ரெம்பர் மாதம் இடம் பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பிரதேச செயலாளரால், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா முன்னிலையில் மீள்குடியமர்த்தப் பட வேண்டியவர்கள் தொடர்பான சகல விவரங்களும் சமர்ப்பிக்கப்பட்டன.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :

வலி. வடக்குப் பிரதேசத்தில் இன்னமும் விடுவிக்கப் பட வேண்டிய பிரதேசங்கள் (24 கிராம அலுவலர் பிரிவுகள்), மீளக்குடியமர்த்தப்பட வேண்டிய மக்கள் தொடர்பாகப் புள்ளி விவரங்களுடன் 11.09.2012 ஆம் ஆண்டு தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தெல்லிப்பழை பிரதேச செயலாளரால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

இதன்படி மீளக்குடியமர்ந்தோர் (2 ஆயிரத்து 140 குடும்பங்கள்), அடிப்படை வசதியின்மையால் மீளக் குடியமராதோர் (4 ஆயிரத்து 562 குடும்பங்கள்), மீளக் குடியமர வேண்டியோர் (6 ஆயிரத்து 496 குடும்பங்கள்) விவரங்கள் மற்றும் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள், பகுதியாக அனுமதிக்கப்பட்ட கிராம அலுவலர் பிரிவுகள் என்பனவும் பிரதேச செயலாளரால் தெரியப்படுத்தப்பட்டிருந்தது.

அத்துடன் வலி. வடக்குப் பிரதேசத்தை நிரந்தர வசிப்பிடமாகக் கொண்டு தற்போது வலி.வடக்கு பிரதேசத்தில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்போர் (288 குடும்பங்கள்), வேறு பிரதேச செயலாளர் பிரிவில் நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்போர் (1,268 குடும்பங்கள்) எண்ணிக்கையும் புள்ளிவிவரரீதியாகச் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

இந்த நிலையில், மீளக் குடியமர்த்தப்பட வேண்டியவர்கள் குறித்த சரியான தகவல் இல்லை என்று அரச அதிபர் தெரிவித்திருப்பதும், ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற விசேட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் மேற்படி தகவல்களை ஜனாதிபதியின் கவனத்துக்கு அரச அதிபர் கொண்டுவராததும் எமக்கு மனவருத்தத்தை அளிக்கின்றது. அரச அதிபரின் இந்தக் கூற்றானது “முழுப் பூசனிக் காயைச் சோற்றினுள் மறைப்பது’ போன்ற செயலாக உள்ளது. எனவே உண்மை நிலையை உணர்ந்து மீள்குடியமர்விற்கு உதவிக்கரம் நீட்டுமாறு வலி. வடக்கு மக்களின் மக்களின் சார்பில் கேட்கிறோம். என்றுள்ளது.

தொடர்புடைய செய்தி

வலி. வடக்கில் மீள்குடியேற்றப்பட வேண்டிய மக்களின் தகவல் இல்லை: அரச அதிபர்

Related Posts