முழுநேர பயிற்சியாளருக்கு தேவையான பக்குவம் இல்லை: ஜயவர்தன

தான் இன்னும் முழுநேர பயிற்சியாளருக்கு தேவையான பக்குவத்துடன் இல்லையென்பதாலேயே இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளராகவில்லை என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் மஹில்ல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் ஐ.பி.எல் தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு துடுப்பாட்ட ஆலோசகராகவும் பயிற்சியாளராகவும் உள்ள மஹில்ல ஜயவர்தன, இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இலங்கை அணிக்கு ஏன் பயிற்சியாளராக செயற்படவில்லை என இதன்போது கேள்வியெழுப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர்,

“இங்கிலாந்து மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுடன் குறுங்கால ஒப்பந்தங்களையே மேற்கொண்டுள்ளேன். ஆனால் நான் இன்னும் முழுநேர பயிற்சியாளருக்கு தேவையான பக்குவத்துடன் இல்லை.

சுமார் 18 வருடங்கள் தொடர்ச்சியாக விளையாடி முழுநேர பயிற்சியாளராக மாறுவதென்பது உண்மையிலேயே கடினமானதொன்று. தற்போது எனது பொறுப்பு எனது குடும்பத்தினை கவனிப்பதே. அவர்களுடன் நேரத்தினை ஒதுக்க வேண்டியது எனது கட்டாயக் கடமைகளுள் ஒன்றாகும்.

இலங்கை அணி குறித்து கூறுவோமாயின் அவர்களுக்கு சிறந்ததொரு பயிற்சியாளர் இருக்கிறார். எவ்வாறாயினும் நடைமுறையிலுள்ள முறைமைகளில் இருந்து தூரமாகி இருப்பது சாலச் சிறந்தது என நினைக்கின்றேன்” என கூறினார்.

Related Posts