“நாட்டை சூறையாடிய பயங்கரவாதிகளை மே 18இல் நினைவுகூர வடக்கு மாகாண சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு அரசும் இணக்கப்பாடு தெரிவித்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது.” – இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
மே 18ஆம் திகதி முள்ளிவாய்காலில் வடக்கு மாகாண சபை நினைவேந்தல் நிகழ்வை நடத்தவுள்ளது. இதற்கு அரசும் அனுமதி வழங்கியுள்ளது.
இந்நிலையிலேயே தினேஷ் குணவர்தன எம்.பி. மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு மஹிந்த ஆட்சியில் நாட்டின் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. ஆனால், தற்போது மீண்டும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டும் வகையில் பல சம்பவங்கள் நடைபெற்றுள்ளன.
எதிர்வரும் மே 18ஆம் திகதி வடக்கு மாகாண சபை முள்ளிவாய்காலில் நினைவேந்தலை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளமைக்கு அரசு பூரண அனுமதி வழங்கியுள்ளது. வடக்கு மாகாண சபையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கும் சமஷ்டிக் கோரிக்கைக்கும் அரசின் பூரண ஆதரவு உள்ளது. நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு பங்கம் விளைவிக்கும் வடக்கு மாகாண சபை தொடர்பில் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்” – என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.