முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை குழப்பவே முன்னாள் போராளிகள் கைது!

எதிர்வரும் மே-18ம் திகதி அனுஷ்டிக்கப்படும் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை குழப்பவே முன்னாள் போராளிகள் கடத்தப்படுவதும் விசாரணைக்கு அழைப்பதும் இடம்பெறுவதாக, வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். “படைத்தரப்பினராலும் பொலிஸாராலும் முன்னாள் போராளிகள் கைது செய்யப்படுவதும் சட்டரீதியாக கைது செய்யப்படுவதற்கு அப்பால் கடத்தப்பட்டு பின்னர் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகக் கூறப்படுவதும் மிகப் பெரிய அச்சுறுத்தல்.

இம்மாதம் 30ம் திகதி பல நூற்றுக் கணக்கானவர்களை கொழும்பிற்கு வாருங்கள், விசாரணைக்கு ஆஜராகுங்கள் என அழைப்பு விடுக்கப்பட்டமையானது எதிர்வரும் மே 18ம் திகதி நடைபெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை தடுக்கும் முயற்சிகாகவே பார்க்க வேண்டியுள்ளது. நல்லாட்சி அரசாங்கம் எனக்கூறும் இந்த அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் செயற்பாட்டையே தொடருகின்றது என்ற குற்றச்சாட்டை நாம் முன்வைக்கின்றோம். கடந்த காலங்களில் ஒரு கோரமுகத்துடன் முன்னாள் ஜனாதிபதி மேற்கொண்ட விடயங்களை சிரித்த முகத்துடன் தற்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் மேற்கொள்கிறார்கள்.

இப்போது அவர்கள் இறுக்கமான முகத்தோடு எமது இனத்தை அழிக்க, பழிவாங்க முற்படுகிறார்களா என்ற சந்தேகம் எம்மில் எழுகிறது. இதற்குப் பிரதான விடயம் யாதெனில், அரசியல் தீர்வு விடயங்களில் தமிழ் மக்கள் தமது உள்ளக் குமுறல்களை, வெளிப்பாடுகளை வெளியே சொல்ல முடியாதவாறு ஒரு அச்சமான சூழலை ஏற்படுத்தி இனப்பிரச்சினைக்கு அரைகுறையான தீர்வை எங்கள் மீது திணிப்பதாகவே பார்க்கின்றோம். வடமாகாண பிரேரணை தொடர்பில், தீர்வுத்திட்டம் முன்யோசனைகள் தொடர்பில் வடமாகாண சபையில் முழுமை பெறமுன்னமே தென்னிலங்கையில் இருக்கக்கூடிய இனவாதிகளிடமிருந்து கூச்சல், குழப்பங்கள் வெடிக்கத் தொடங்கியுள்ளது.

இதேவேளை இரத்த ஆறு ஓடும் என்று பொதுபலசேனா, இராவணா பலய போன்ற அமைப்புக்களின் கருத்துக்களை நாம் முழுமையான இனவெறி கூற்றுக்களாகவே பார்க்கின்றோம். முஸ்லிம் மக்கள் 1974ம் ஆண்டு புத்தளத்திலுள்ள பள்ளிவாசலில் கொல்லப்பட்ட போது முஸ்லிம் பிரதிநிதிகள் எவரும் கருத்துக்கள் முன்வைக்கவில்லை. தந்தை செல்வாவே கருத்துக்களை முன்வைத்தார். அதாவது முஸ்லிம் மக்களுக்கும் மலையக தமிழ் மக்களுக்கும் சுய உரிமையை கேட்டு நிற்கின்றோம்.ஆகவே இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள்தான் இருந்தது என்பதை எங்களுடைய தலைவர்கள் கூறியுள்ளார்கள்.

முஸ்லிம் மக்கள் உரிமைகளை நிலைநாட்டும் வகையில் முஸ்லிம் சுயாட்சி பிராந்தியம் அதேபோல் மலையக தமிழ் மக்களுக்கான மலையக தமிழ் சுயாட்சி சபை ஆகியவற்றை வடமாகாண சபை முன்வைத்துள்ளது. இது இன்று நேற்று அல்ல தந்தை செல்வா காலத்தில் கூறப்பட்டுள்ளது என்பதை தெரியப்படுத்துகின்றேன் எனத் தெரிவித்தார்.

Related Posts