இலங்கை அரசாங்கம் முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களைக் கொன்று குவித்த நாள் (மே 18) இன்றாகும். முள்ளிவாய்க்கால் இன அழிப்பு இடம்பெற்ற 6 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று திங்கட்கிழமை தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், தமிழகத்திலும், தமிழ் மக்கள் வசிக்கும் புலம்பெயர் தேசம் எங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.
2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது அரச படைகளின் பல்வேறு விதமான தாக்குதல்களில் கொத்துக்கொத்தாக பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். மே மாதத்தின் 12 ஆம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் மக்களின் அவலச்சாவு உச்சத்தில் இருந்தது.
அத்துடன் இறுதிப் போர் மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், மே 12 ஆம் திகதியிலிருந்து 18ஆம் திகதி வரையான வாரத்தை தமிழின அழிப்பு வாரமாக – முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரமாக உலகத் தமிழர்கள் பிரகடனப்படுத்தி அதனை அனுஷ்டித்து வருகின்றனர்.
இறுதி நாளான மே 18ஆம் திகதி நினைவேந்தல் நிகழ்வுகளையும் பெருமெடுப்பில் நடத்தி வருகின்றனர். அதற்கமைய இம்முறையும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை தரணியெங்கும் உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது.