முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கால் நினைவுதினம் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியிலும் இன்று (செவ்வாய்க்கிழமை) தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் நினைவுகூரப்பட்டது.

இந்த விடயம் தொடர்பாக தெரிவித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தனது முகப்புத்தகத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் குறித்த பதிவில், “முள்ளிவாய்க்கால் 12ஆவது ஆண்டு நினைவு நாள் வடக்கு, கிழக்கின் பல பகுதிகளிலும் தமிழர் பகுதிகளிலும் இன்று (செவ்வாய்கிழமை) அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்தநிலையிலேயே இன்றைய தினம் நானும் எமது கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சகிதம் நாடாளுமன்ற வளாகத்தில் கறுப்புடை அணிந்து மெழுகுதிரி ஏந்தி அஞ்சலி செலுத்தினோம்.

குறித்த நிகழ்வில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன், கோவிந்தன் கருணாகரம், கலையரசன், சிறிதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் உள்ளிட்டவர்கள் பங்கேற்றிருந்தனர்.

அனைவரும் உங்கள் முகநூல் #MVM2021 Profile Frame இனை மாற்றி அன்றைய நாளை எம் மக்களுக்காக நினைவு கூருவதோடு சர்வதேச ரீதியிலான கவனத்துக்கும் எடுத்துச்செல்வோம்” என பதிவிட்டுள்ளார்.

Related Posts