முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க சிறப்புக் குழு! : அங்கத்தவர்களை இணைக்க விண்ணப்பங்கோரல்

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை 2019ஆம் ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் முன்னெடுத்துச் செல்ல சிறப்புக் குழுவொன்றை நியமிக்க தீர்மானித்துள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அறிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் அங்கத்துவம் பெற விரும்பும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களிடமிருந்து விண்ணப்பங்களை அவர் கோரியுள்ளார்.

இதுதோடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஆண்டுதோறும் மே மாதம் 18ஆம் திகதி நடத்துவதற்கு நினைவேந்தல் நாளாக அந்தத் தினத்தை பிரகடனப்படுத்தியிருந்தோம்.

அதற்காக இந்த ஆண்டு வழிநடத்தல் குழுவொன்றை அமைத்திருந்தோம். இனிவருங்காலங்களில் சில வேளை வடக்கு மாகாண சபைக்கான தேர்தல் உரிய காலத்தில் நடாத்தப்படாமையால் எம்மவர் ஆட்சியில் இல்லாதிருக்க வேண்டிவரினும் அல்லது ஆளுநரின் ஆட்சியில் எதிர்வரும் காலங்களில் இருக்கவேண்டிவரினும்கூட இந்த நிகழ்வை தொடர்ந்து வருடந்தோறும் நடாத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய உத்தேசித்துள்ளோம்.

அதற்கான குழுவை இப்போதே நியமிக்கத் தீர்மானித்துள்ளோம். இந்த நிகழ்வு தொடர்ச்சியாக வருடந்தோறும் பரந்துபட்ட விதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாகவுள்ள ஆர்வமுள்ள பொது நிறுவனங்களை இந்தக் குழுவில் நிறுவனத்துக்கு இருவர் என்ற ரீதியில் இணைத்துக் கொண்டு ஒரு குழுவை உருவாக்க எண்ணியுள்ளோம்.

மேலதிகமாக வேண்டுமெனில் தேவையான சில நபர்களையும் உள்ளடக்க உத்தேசித்துள்ளோம்.

இந்தக் குழுவானது 2019ஆம் ஆண்டிலிருந்து சுயமாக இயங்கக் கூடியதாக இருக்கும். இவ்வாறு அமையவிருக்கும் குழுவில் உறுப்பினராக இணைந்து கொள்ள விரும்பும் பொது அமைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்கள் மற்றும் தகைமை சார்ந்த பொதுமக்கள் அவ்வாறு சேர்த்துக் கொள்ளக்கூடிய பெயர்களை தத்தமது கடிதத் தலைப்புக்களில் பின்வரும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகோள் ஒன்றை இதன் மூலம் விடுக்கின்றேன்.

அனுப்ப வேண்டிய முகவரி –

முதலமைச்சரின் பிரத்தியேகச் செயலாளர்,
முதலமைச்சர் அலுவலகம்,
வடமாகாணம், கைதடி

குழு அங்கத்தவர் நியமனமானது உரியவாறு வெளிப்படையாக காலாகாலத்தில் நடைபெறும் – என்றுள்ளது.

Related Posts