தமிழினப் படுகொலை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் முதல் நாள் நினைவேந்தல் செம்மணிப் படுகொலை புதைகுழி இடத்தில் இன்று காலை கடைப்பிடிக்கப்பட்டது.
மே12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை தமிழினப் படுகொலை வாரம் கடைப்பிடுக்கப்படுகிறது.
இதற்கமைய தமிழினப் படுகொலை வாரத்தின் முதலாவது நாளான இன்று காலை செம்மணியில் படுகொலை செய்யப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற நினைவேந்தலில் வடக்கு அமைச்சர் அனந்தி சசிதரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர் குகதாஸ், உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து இரண்டாவது சுடரேற்றும் நிகழ்வு யாழ்.தென்மராட்சி மிருசுவில் புனித நிக்கலஸ் தேவாலயத்துக்கு முன்பாக இடம்பெற்றது.
மிருசுவில் கிராமத்தில் 2000ஆம் ஆண்டு டிசெம்பர் 20ஆம் திகதி இராணுவத்தினரால் குழந்தைகள் உள்பட 8 பேர் படுகொலை செய்யப்பட்டு மலசல கூடக் குழிக்குள் போடப்பட்டிருந்தனர்.
கொல்லப்பட்டவர்களை நினைவு கூர்ந்து நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற நிகழ்வில், வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், சாவகச்சேரி பிரதேச சபை தலைவர் க.வாமதேவன், பிரதேச சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
இன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற படுகொலை வார நிகர்வுகள் வடக்கு கிழக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் இடம்பெற்று இறுதி நாளான மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்காலில் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.