முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் முதலமைச்சரின் வேண்டுகோள்

எதிர்வரும் 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் அனைத்து வடகிழக்கு தமிழ் மக்களும் 3 நிமிட மௌன அஞ்சலியை அனுஷ்டிக்குமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரும் நாளாக இம்மாதம் 18ம் திகதி அனுஸ்டிக்கப்படவிருக்கின்றதாக முதலமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

2009ம் ஆண்டு இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கு உணர்வு பூர்வமாக அஞ்சலி செலுத்தும் முகமாக முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தினம் நினைவுகூரப்படுகிறது

2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி முடிவிலே உயிரிழந்த ஆயிரமாயிரம் பொதுமக்கள் தொடர்பான உண்மை நிலை இது வரைக்கும் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்படவில்லை.

நடந்தது சம்பந்தமான நம்பகத்தன்மை வாய்ந்த விசாரணைப்பொறிமுறை இதுவரையில் ஏற்படுத்தப்படவில்லை.

இன்றும் எம் மக்கள் உண்மையை அறிய ஆவலாக உள்ளார்கள்.

அண்மையில் ஐக்கிய நாடுகளுக்கான மனித உரிமைகள் பேரவை, போரிலே கொல்லப்பட்டவர்களுக்கான நீதி உறுதிப்படுத்தப்படும் என்ற தோரணையில் மேலும் இரு வருடங்கள் கால நீட்சி அளித்துள்ளது.

வெளிப்படைத்தன்மையுடன் பொறுப்புக் கூறலானது நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதே சர்வதேசத்தவர்களின் எதிர்பார்ப்பு.

இலங்கை அரசாங்கம் இது பற்றிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகக் கூறியே கால நீட்சி பெற்றுக்கொண்டார்கள். ஆனால் அது பற்றி எவ்விதமான நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் முன்வருவதாகத் தெரியவில்லை.

முன்னைய ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையார் மட்டும் வெளிநாட்டு உள்ளடங்கலுடன் போர்க்குற்ற விசாரணை நடைபெற வேண்டும் என்ற தமது தனியான கருத்தை வெளியிட்டுள்ளார்.

வெளிநாட்டு உள்ளீடுகள் இல்லாத நீதி விசாரணை ஒரு போதும் உண்மையை வெளிக்கொண்டுவர உதவி செய்யாது.

சிலர் இவ்வாறான பொறிமுறையை நாங்கள் வேண்டி நிற்பதன் நோக்கம் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே என்று நம்புகின்றார்கள். அதனால் பெருந்தன்மையுடன் இரக்கம் காட்டி அதைப்பற்றி மறந்துவிடலாமே என்று கூறுகின்றார்கள்.

இவ்வாறு கூறுபவர்கள் கொழும்பிலும் வேறு இடங்களிலும் சொகுசாக இருந்துகொண்டு இவ்வாறான கருத்துக்களை வெளிக்கொண்டு வருகின்றார்கள். இது தவறு. இப்பேற்பட்ட விசாரணை தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை சர்வதேசத்திற்கு எடுத்துரைக்க உதவும்.

குற்றவாளிகள் தண்டிக்கப்படுகின்றார்களோ இல்லையோ இதுவரை காலமும் தமிழ் மக்கள் எவ்வாறு நடாத்தப்பட்டுள்ளார்கள் என்பது சம்பந்தமான விடயங்கள் இவ்வாறான விசாரணைகள் வெளிக்கொண்டுவருவன.

அத்துடன் நடந்தவை வெளிச்சத்திற்கு வந்தால் அவை தமிழ் மக்களின் நல்லதொரு அரசியல் தீர்வுக்கு முன்னோடியாக அமையக்கூடும்.

தமிழர்கள் தமது அரசியல் உரிமைக்கான கோரிக்கைகளை இதுவரைகாலமும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்த காரணங்களை எடுத்தியம்ப அவ்வாறான விசாரணைகள் வழிவகுப்பன.

உண்மையான அதிகாரப்பரவலாக்கம் விரைந்து செயற்படவேண்டியதொன்று என்பதை அனைவரையும் அறிந்து கொள்ளச்செய்வன என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts