முள்ளிவாய்க்காலில் நாம் தோற்றுப் போகவில்லை. அது தற்காலிகப் பின்னடைவு என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் முள்ளிவாய்க்கால் இறுதிப் போரில் பெற்ரோர், உறவினரை இழந்த பிள்ளைகளை சந்தித்து அவர்களுடன், இறுதிப் போரில் உயிர் நீத்த அனைவருக்கும் சுடரேற்றி வணக்கம் செலுத்தும் நிகழ்விலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் தனது உரையில் மேலும் குறிப்பிட்டவை வருமாறு:-
எமது உறவுகளை நினைத்துப் பார்ப்பதற்கும் அவர்களுக்காக ஒரு தீபமேற்றுவதற்கு கூட சுதந்திரமில்லாத மக்களாகத்தான் நாங்கள் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். போர் முடிந்து ஆறு வருடங்கள் கடந்தும் முள்ளிவாய்க்காலில் தீபமேற்றுவதற்கு அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டிருந்தது. தடைகளை மீறித்தான் தீபமேற்றவேண்டிய சூழலுமேற்பட்டிருந்தது.
ஆகவே எமது மண்ணில் ஆட்சிகள் மாறியிருந்தாலும் அவர்களின் மனங்களும் குணங்களும் மாற்றம் பெறவில்லை.ஆகவே நாங்கள் எமது உரிமைகளைப் பெற்றுக்கொள்ளாத வரையில் தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆளுகின்ற சூழல் ஏற்படாத வரையில் அது எந்த ஆட்சியாக இருந்தாலும் கூட அந்த ஆட்சியானது தமிழ் மக்களுக்கு சாதகமாக இருக்கமாட்டாது என்பதைத் தான் ஆட்சியாளர்கள் மீண்டும் மீண்டும் நிரூபித்து வருகின்றார்கள்.
ஆனாலும் கூட சர்வதேச ரீதியாக எமது உறவுகள் எமக்காக போராடியவர்கள் எம்மை நடுத்தெருவில் விட்டுச் செல்லவில்லை சர்வதேச அளவில் எமது மக்களது பிரச்சினைகள் பேசப்படுகின்ற பிரச்சினைகளாக எமது மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவேண்டும் என்ற சிந்தனையை சர்வதேசத்திற்கு தெரிவித்தவர்களாக அதனை உணர வைத்தவர்களாக எமது போராட்டத்தை விட்டுச் சென்றிருக்கிறார்கள் அந்தவகையில் இன்னுமொரு மூலையில் நம்பிக்கை ஒளிக்கீற்று இருக்கின்றது நாங்கள் அந்த ஒளிக்கீற்றைப் பற்றிப்பிடித்து எமது மக்களுக்கான ஒரு முழுமையான விடிவினை ஏற்படுத்தவேண்டிய பொறுப்பும்,கடமையும் எங்கள் எல்லோருக்குமிருக்கிறது.
ஆறு வருடம் கடந்தும் கூட எமது பெற்றோர்கள் வீதிவீதியாக அலைகின்றார்கள். காணாமல் போன தமது உறவுகளை பார்ப்பதற்காக தமது உறவுகள் எங்கெங்கோ இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டவர்களாக இன்னும் அவர்கள் தமக்கு கிடைப்பார்கள் என்ற நம்பிக்கையில் அலைந்து திரியக்கூடிய ஒரு அவலமான சூழலில் தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
ஆனால் அரசாங்கமோ அதற்கு தகுந்த பதிலை வழங்காமலிருக்கின்றது. ஆனால் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் நாங்களும் இந்த அரசாங்கத்திற்கு கூறிவருகின்றோம் எங்கு எங்கெல்லாலம் எமது பிள்ளைகள் அடைத்து வைக்கப்பட்டார்கள்,யாரால் அடைத்து வைக்கப்பட்டார்கள் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை அரசாங்கம் கண்டறியவேண்டும் என்று கேட்கின்றோம் சர்வதே சரீதியாக அவர்களுக்குச் சொல்லியும் வருகின்றோம். ஆகவே நான் இங்கிருக்கக் கூடிய குழந்தைகளுக்கு சொல்லுகின்றேன் நாங்கள் நம்பிக்கையுடன் முன்நோக்கிச் செல்வோம். – எனறார்.
இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிறேமச்சந்திரன் வடக்கு மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன், வல்வெட்டித்துறை நகரசபையின் முன்னாள் தவிசாளர் அனந்தராசா, வலிகாமம் கிழக்கு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் ஆகியோரோடு இறுதிப் போரில் தாய்,தந்தையரை இழந்த பிள்ளைகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.