முள்ளிவாய்க்காலில் உறவுகள் அஞ்சலி! முள்ளிவாய்க்கால் பிரகடனமும் வாசிக்கப்பட்டது!!

முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு நினைவேந்தல் 11ஆம் ஆண்டு நிகழ்வு இன்று முள்ளிவாய்க்கால் மண்ணில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.

இன்று காலை அனுமதிக்கப்பட்ட உறவுகள் முள்ளிவாய்க்கால் மண்ணில் ஒன்று கூடினர்.

காலை 10 மணியளவில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான பிரதான நினைவுச் சுடர் ஏற்றப்பட்டது.

உறவுகளை இழந்தவர்கள், கண்ணீர் விட்டும், கதறியும், முள்ளிவாய்க்கால் மண்ணில் அழுது புரண்டு தமது ஆற்ற முடியாத் துயரை வெளிப்படுத்தினர்.

முள்ளிவாய்க்கால் பிரகடனம் வருமாறு:

பேரன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழின உறவுகளே,

சிங்கள-பௌத்த பெருந்தேசியவாதம் நிறுவன மயப்படுத்தப்பட்டு, வரலாற்றில் கட்டமைக்கப்பட்ட வன்முறையின் உச்சமாக முள்ளிவாய்க்காலில் தமிழினப் படுகொலை நடந்தேறி இன்றுடன் 11 ஆண்டுகள் நிறைவடைகின்றன. கொத்துக் கொத்தாக, துடி துடிக்க, கொல்லப்பட்ட எம் இரத்தச் சொந்தங்களின் குருதி தோய்ந்த மண்ணில், அவர்களின் கனவுகளைச் சுமந்து தமிழினத் தேசிய இனவழிப்பு நாளை நெஞ்சுறுதியுடன் நினைவுகூருகின்றோம்.

ஆண்டாண்டு காலமாக, ஈழத்தமிழினம் சிங்கள-பௌத்த தேசியவாதத்தால் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டு, காலம் காலமாகத் தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றி வந்துள்ளது. ஆனால் சர்வதேசமே கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்க்க, இந்த நூற்றாண்டில் அரங்கேற்றப்பட்ட மிகப்பாரிய இனப்படுகொலை, முள்ளிவாய்க்காலில் சில நாடுகளின் உதவியுடன் அரங்கேற்றப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தமிழினத்துக்கெதிராக, பூகோள ஒழுங்கை திரிவுபடுத்தி, சிங்கள-பௌத்த பேரினவாதம் தொடர்ந்தும், கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையைத் தமிழர் தாயகமெங்கும் புரிந்து வருகிறது. தமிழர் தாயகமான வடக்கு-கிழக்கைப் பிளவுபடுத்தி, செறிவாக இராணுவ மயப்படுத்தி ஓர் உளவியல் போரினூடு, தமிழ் மக்கள் மத்தியில் இன அடிப்படையில் கூட்டுக் கோரிக்கைகள் எழாது, இரும்புப்பிடிக்குள் ஈழத்தமிழ் மக்களாகிய எம்மை அடக்குமுறையினோடு நசுக்கி வருகின்றது.

கடந்த சனாதிபதித் தேர்தலின் மூலம் சிறிலங்கா புதிய அரசியல் கலாசாரத்தைக் கட்டமைத்திருக்கின்றது. அக்கட்டமைப்பு சிங்கள-பௌத்த தேசிய வாதத்தின் கோரிக்கையை இன்னும் சனநாயக செயன்முறையினூடு வலுப்படுத்தியுள்ளது. சிங்கள-பௌத்த அறுதிப் பெரும்பான்மை வாக்குகளோடு சிறிலங்கா தனக்கான ஆட்சியாளரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றது.

தெரிந்தெடுத்த ஆட்சியாளர் போர்க்குற்றவாளியாகச் சர்வதேசத்தினால் இனங்காணப்பட்டவர். ‘சிறுபான்மையினரது வாக்குகள் இல்லாமலேயே சிறிலங்கா தனக்கான ஆட்சியாளரைத் தெரிந்தெடுக்கலாம்’ என்ற புதிய அரசியல் கலாச்சாரம், சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் ஏகாதிபத்தியத் தன்மையை வலுப்படுத்தியுள்ளது. சிறிலங்கா சிங்கள-பௌத்தர்களுக்கானது என்பதைச் சிங்கள தேசம் வரலாற்றில் தமிழ் மக்களுக்குத் தொடர்ந்தும் நினைவூட்டி வருகின்றது. பெரும்பான்மை தேசியவாதம் தமிழினத்தைத் தொடர்ந்தும் ‘இனப்பலி கடாவாக்கி’ வருகின்றது. அது இன்றுவரைக்கும் தொடர்கின்றது.

போர்க்குற்றவாளியை சனாதிபதியாக்கிய சிங்கள தேசம், குற்றவாளிகளிடமே நீதியைக் கோருவதற்கு தமிழினத்தைத் வற்புறுத்தி வருகின்றது. போர்க்குற்றவாளியிடம் நீதி கேட்டல் வேடிக்கையாகவுள்ளது. போர்க் குற்றவாளியை அரசாட்சிக்குக் கொண்டு வந்ததன் மூலம் போரையும், இனப்படுகொலையையும் பாரிய மனித உரிமை மீறல்களையும் நியாயப்படுத்த முனைப்புக்காட்டுகிறது. போருக்கு அற ஒழுக்கச் சாயம்; பூச எத்தனிக்கிறது. போர்க் குற்றவாளிகளுக்குப் பதவி உயர்வு வழங்குவதன் மூலம் சிங்கள தேசம் அவர்களைக் கதாநாயகர்களாகக் கட்டமைத்துக் குற்றங்களை மறைத்து, இவ்வாறு தண்டனை விலக்கீட்டுக் கலாச்சாரத்தை நிறுவனமயப்படுத்துகின்றது.

இதன் நீட்சியாகவே மிருசுவிலில் அப்பாவிப் பொதுமக்களைக் கொலை செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணையின் பின் சிறையில் அடைக்கப்பட்ட சுனில் இரத்நாயக்க என்ற இராணுவ அதிகாரியை, உயர் நீதிமன்றம் குற்றத்தை உறுதி செய்திருந்த நிலையிலும் தற்போதைய சனாதிபதி பொது மன்னிப்பு கொடுத்து விடுதலை செய்ததன் மூலம் மீண்டும் ஒருமுறை சிறிலங்கா நீதித்துறைமீதான தமிழரின் அவநம்பிக்கையை உறுதிசெய்துள்ளது. சிறிலங்கா நீதித்துறை வரலாற்றில் மிக அரிதான சம்பவம்தான் சுனில் இரத்நாயக்காவின் கைதும், தடுப்பும், சிறைத்தண்டனையும். கொல்லப்பட்ட எண்மரில் மூவர் சிறுவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. குற்றவாளிகளிடமே நீதி கேட்டால் என்ன விளைவு நேரும் என்பதற்கு இந்நிகழ்வு மிகச்சிறந்த உதாரணம்.

தமிழர்கள் சிறிலங்காவின் நீதித்துறை கட்டமைப்பில் நம்பிக்கையிழந்து பல தசாப்தங்கள் கடந்த நிலையிலும், பட்டறிவின் அடிப்படையிலும் பாரிய மனித உரிமை மீறல்களுக்குச் சர்வதேச விசாரணையைக் கோரியிருந்தனர். அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கலப்பு பொறிமுறையை ஐ.நா பரிந்துரைத்தது. கலப்புப் பொறிமுறை ஏற்கனவே தோல்வி கண்டிருந்தது தெரிந்தும் ஐ.நா மீண்டும் கலப்புப் பொறிமுறையைப் பரிந்துரைத்தது வேடிக்கையானதும் கவலைக்குமுரிய விடயமுமாகும்.

மேற்குலக நாடுகளும் ஐ.நாவும் சிறிலங்கா தொடர்பில் மென்போக்கைக் கடைப்பிடிப்பது என்பது, அதனது பாரிய மனித உரிமை மீறல் தன்மையைக் குறைத்து மதிப்பிடுவதற்கு ஏதுவாக அமைவதுடன் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை வடக்கு-கிழக்கில் இன்றும் நடந்தேறிக் கொண்டிருக்கின்றது. அவற்றின் பார்வையாளர்களாக ஐ.நாவும் மேற்குலகும் இருப்பது பாதிக்கப்பட்டவர்கள் என்றரீதியில் எமக்கு ஆழ்ந்த கவலையையும் ஏமாற்றத்தையும் அளிக்கின்றது.

‘பின்முள்ளிவாய்க்கால்’ வரலாற்று அரசியல் தளத்தில், தமிழ் மக்கள் இனி யாரையும் நம்பி ஏமாறத் தயாராகவில்லை என்பதற்கான அறிகுறிகள் ஆங்காங்கே வெளித்தோன்றத் தொடங்கியுள்ளன. ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழ்நிலையில், இன்று எமக்கு இருக்கும் பலமான ஆயுதங்கள், தமிழர்களின் ‘பாதிக்கப்பட்டமையும்’, ‘தமிழ்த் தேசிய நினைவுத் திறமும்’; ஆகும். சிங்கள-பௌத்த தேசியவாதத்தின் ஏகாதிபத்தியத் தன்மை தமிழர்களுக்கு ஒருபோதும் தீர்வைத் தரப்போவதில்லை. தமிழ்; பாதிக்கப்பட்மையும், தமிழ்த் தேசிய நினைவுத்திறமும் கட்டமைக்கப்பட்டு நிறுவனமயப்படுத்தப்படாத வெளி தொடர்ந்து கொண்டிருக்கின்றது. தமிழ்க்; கூட்டுப் பாதிக்கப்பட்டமை , வெவ்வேறு தளங்களினூடு கட்டமைக்கப்பட்டுக் கூட்டாக நிறுவனமயப்படுத்தப்பட்டு, பொறுப்பக்கூறல் பொறிமுறை முன்னெடுக்கப்படவேண்டும். இதற்கு ஒட்டு மொத்தத் தமிழினமும் தனது வளங்களைத் திரட்டிச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலோ அல்லது சிறப்பு குற்றவியல் தீர்ப்பாயப் பொறிமுறையினூடோ நடந்த இனப்படுகொலைக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

தமிழினப்படுகொலைக்கு நீதி வேண்டிய பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதற்கான நியாயப்பிரச்சாரங்களும், சாட்சியங்களை நிறுவனமயப்படுத்தவதற்கும், ஒட்டுமொத்தத் தமிழர்களும் தமிழ் தேசியத்தின் அடிப்படையில் சமூக இயக்கமாதல் அவசியமாகின்றது. சமூக இயக்கத்தினூடு தமிழ்த் தேசத்தையும் அதன் இறைமையையும் அங்கிகரித்த தீர்வே தமிழரின் கூட்டு இருப்புரிமைக்கான தீர்வாகும்.

இனப்படுகொலைக்கான நீதியினைக் கோருவதன் மூலம் தான், சிறிலங்காவின் தமிழினப்படுகொலையின் உள்நோக்கம் வரலாற்றில் கட்டமைக்கப்பட்டு மிகத்திட்டமிடப்பட்ட இனப்படுகொலை நடந்தேறியது என்பதை நிரூபிப்பதன் மூலம், தமிழர்கள் ஒரு தேசிய இனம், ஒரு தேசத்திற்கு உரியவர்கள் என்பதை மிக ஆணித்தரமாக நிரூபிக்க முடியும். தமிழர்கள் இன அடையாளத்தால் தனித்துவமானவர்கள். மொழி, பண்பாடு, கலாச்சாரம், வரலாறு இவை எல்லாமே அத்தனித்துவத்திற்கு வலுச்சேர்க்;கின்றது. தமிழர்கள் வடக்கு-கிழக்கைப் பூர்வீக தாயகமாகக் கொண்டவர்கள். சிறிலங்கா அரசின் தமிழினப்படுகொலைக்கான உள்நோக்கத்தை நிரூபித்து சர்வதேசப் பொறிமுறையினூடு நீதி கோருவதன் மூலம் தான், தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கையை வலுப்படுத்த முடியும்.

சர்வதேசப் பொறிமுறைக்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படுகின்ற தருணத்தில், அதற்குச் சமாந்தரமாக தமிழ்த் தேச கட்டுமானத்திற்குரிய நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்படவேண்டும். தமிழின அடையாளங்களைப் பலப்படுத்துகின்ற, பேணுகின்ற முயற்சிகளும், சமூக அகக்கட்டுமானம் தொடர்பில் முற்போக்கான கருத்தியல்க் கட்டமைப்புக்களும், தமிழ்த் தேசியத்தின் செல்நெறியை சிதைக்கின்ற கட்டமைப்புக் கட்டவிழ்ப்புக்களும், தமிழ்த் தேசியத்தினால் ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கு மைய தந்திரோபாய உத்திகளும், தமிழினப் பொருளாதாரத்தை உரமூட்டுகின்ற, நிலைத்த தன்மை கொண்ட பொருளாதாரக் கொள்கைக் கட்டமைவுகளும், தேசங்களால் கட்டப்படுகின்ற சனநாயகப் பொறிமுறை நோக்கிய நகர்வும் தமிழினத்தின் வரலாற்றுத் தேவையாக, கடமையாக எம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஓற்றையாட்சிக்குள் பேச்சுவார்த்தை என்பது காலத்தை இழுத்தடிப்பதும், தமிழரின் கூட்டு இருப்புரிமையை சிதறடித்தலுக்குமான திட்டமிட்ட பொறிமுறை என்பதற்கு, கடந்த கால வரலாறு சாட்சி. தேசங்கள் ஒன்றாக கட்டமைக்கப்பட்ட சமஷ்டி பொறிமுறை சர்வதேசரீதியில் வெற்றியளித்தமைக்கான சான்றாக நாடுகள் பலவற்றைச் சொல்லமுடியும். இவ்வாறு தேசங்கள் ஒன்றாக வாழக்கூடிய அரசியல் வெளியில்தான், தமிழர்களுக்கான தீர்வும் சாத்தியமாகும் என நாம் உறுதியாக நம்புகின்றோம்.

இந்த ஈழத்துப் பெருந்துயர் நாளிலே, எமது உறவுகளின் நினைவுகளைப் புதுப்பித்து அவர்கள் சுமந்த தேசத்திற்கான கனவுகளை முன்வைத்து, அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் தமிழினத்திற்கு விடுதலை வேண்டி, எமது மக்களின் பலத்திலும், தமிழ்த் தேசியத்திலும் நம்பிக்கை வைத்து, ஒட்டுமொத்த தமிழினத்தையும் தேசிய எழுச்சி கொள்ள இந்த நாள் எங்களுக்கு நினைவூட்டட்டும்!

விடுதலைத் தாகத்தினால் வழிநடத்தப்பட்டு தமிழினமாக எழுச்சி பெறுவோம்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு

Related Posts