முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றலையும் கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண சபை வேட்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதியில் வெள்ளிக்கிழமை (16) பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
‘எங்களது உறவுகள் இந்த மண்ணிலே உயிர்நீத்த நினைவாக எதிர்வரும் 18ஆம் திகதி காலை கீரிமலை நகுலேஸ்வரம் ஆலயத்தில் பிதிர்கடன் செய்து அவர்களின் ஆத்மா சாந்திக்கான பிரார்த்தனையில் அரசியல் கட்சி பேதமின்றியும், சாதி, மத பேதமில்லாமல் இந்த புனித கடனை நிறைவேற்ற வேண்டும்.
அன்றைய தினம் உயிரிழந்தவர்களின் உறவுகள், இறந்தவர்களின் பிதிர்கடனை செய்வதற்கு 50 சிவாச்சாரியர்களை ஒழுங்கு செய்துள்ளோம். அந்த சிவாச்சாரியர்களுக்கு தானம் கொடுக்க வேண்டிய அனைத்து பொருட்களும் எங்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயிரிழந்த 500 பேரின் நினைவாக சிவாச்சாரிமார்களுக்கு தானம் கொடுக்கக்கூடிய வகையில் வேட்டி, சட்டை, சேலை மற்றும் உடுபுடவைகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை அந்த ஆத்மாக்களின் சாந்திக்காக மகா யாகம் வளர்க்கப்படும். தொடர்ந்து சிவனுக்கான உருத்திரா அபிஷேகமும் நடைபெற்று அன்னதாமும் வழங்கப்படவுள்ளது.
தமிழர்களின் மரபும் பண்பாடும் என்ற ரீதியில் இந்த ஏற்பாடுகளை செய்துள்ளோம். எனவே உயிரிழந்த அந்த உறவுகளின் ஆத்மா சாந்தி பிரார்த்தனையில் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும் என காரைநகர் மக்கள் சார்பில் அழைப்பு விடுக்கின்றேன்.
அனைவரும் கலந்துகொண்டு இந்த ஆத்ம சாந்திப் பிரார்த்தனை நிகழ்வில் அமைதியான முறையில் அவர்களுக்காக பிரார்த்திப்போம்.
அத்துடன், இந்த 18 ஆம் திகதி நாங்கள் ஆன்மீக வழியில் நடக்கவுள்ளோம். இதனை யாராவது குழப்ப நினைத்தாலோ இல்லை இதனை பிழையாக சித்தரிக்கவோ வேண்டாம்’ எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.