முள்ளிவாய்கால் பேரவலத்தினை நினைவுகூர அழைப்பு!

இறுதிக்கட்டப்போரில் உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக எதிர்வரும் மே- 18 ஆம் திகதி அனைவரையும் ஒன்று திரளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பில் நேற்று (புதன்கிழமை) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“உலக சமூகங்களின் மனச்சாட்சிக் கதவுகளை இறுக்கி மூடி வைத்தபடி, அவசர அவசரமாக இருபத்தோராம் நூற்றாண்டில் எல்லோர் முன்னிலையிலும் நடந்தேறிய தமிழர்களுக்கெதிரான மாபெரும் மனிதப்பேரவலம் தான் மே-18 முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை.

இப்பேரவலத்தை நாம் எல்லோரும் தமிழர்களாக, வரலாற்று வழித்தடத்தில் சுமந்துவந்த அத்தனை அறவழி முறைகளிலுருந்தும் வழித்தடம் மாறாமல், உலகின் முன்னால் நிமிர்ந்து நின்று நீதி கேட்கும் அத்தனை உரிமைகளும் தமிழர்களாகிய எமக்குண்டு.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவுதினமென்பது தமிழர்களின் ஒட்டுமொத்த துயரங்களாலும், தோல்விகளாலும் துவண்டுபோகும் நிகழ்வல்ல..! மாறாக தமிழர்களின் மீளெழுச்சியைக் கட்டியங்கூறி நிற்கும் தார்மீக வடிவமாக, காலம்காலமாய்த் தொடர்ந்து வரும் அத்தனை வரலாற்றின் அடையாளங்களோடும் தமிழ்த்தேசியம் புத்துயிர்பெறுகின்ற பேரெழுச்சி நிகழ்வாக அமையவேண்டும்!

எனவே இந்த முள்ளிவாய்க்கால் நினைவு கூரலில் அனைத்துத் தமிழ் மக்களினதும், தமிழர்களைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற தமிழர் அமைப்புக்களினதும் பூரண ஒத்துழைப்பினை தமிழ் மாணவர்களான நாம் எதிர்பார்த்து நிற்கின்றோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts