முள்ளியவளையில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சம் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது!!

முள்ளியவளை நாவல்காட்டு கிராமத்தில் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சம் நெஞ்சில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டு வீசப்பட்டுள்ளது என்று சட்ட மருத்துவ வல்லுநரின் நிபுணத்துவ ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் அந்த நபர் 6 மாதங்களுக்கு அண்மித்த காலப்பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டுள்ளமையும் ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு முள்ளியவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவல்காட்டு கிராமத்தில் மக்கள் நடமாற்றம் குறைவான பகுதியிலுள்ள கிணற்றிலிருந்து உருக்குலைந்த சடலம் ஒன்று கடந்த டிசெம்பர் 30ஆம் திகதி மீட்கப்பட்டது.

மாடு மேய்ப்பதற்காக அந்தப் பகுதிக்குச் சென்ற ஒருவர் கிணற்றிலிருந்து துர்நாற்றம் வீசுவதை தொடர்ந்து எட்டிப் பார்த்துள்ளார்.

அதன்போது உருக்குலைந்த நிலையில் சடலம் இனம் காணப்பட்டுள்ளது.

ஆண்கள் அணியும் ரீ சேர்ட்டுடன் சடலம் காணப்பட்டது.

முல்லைத்தீவு நீதிவான் பா.லெனின் குமார், சட்ட மருத்துவ வல்லுநர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டன.

மனித எச்சங்கள் மன்னார் சட்ட மருத்துவ வல்லுநர் செல்லையா பிரணவனினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட போது, நெஞ்சில் கூரிய ஆயுதத்தால் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டது.

அத்துடன் 6 மாதங்களுக்கு உள்பட்ட காலப்பகுதியில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சட்ட மருத்துவ வல்லுநரின் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் முள்ளிவளை பகுதியில் குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் காணாமற்போனவர் தொடர்பில் மரபணு பரிசோதனை செய்வதற்கான பணிகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Related Posts