முள்ளிக்குளத்தை யுத்தம் இடம்பெற்ற பிரதேசமாக மாற்றியது கடற்படை!

யுத்தம் இடம்பெறாத மன்னார் – முள்ளிக்குளம் கிராமத்தில் இருந்து ஸ்ரீலங்கா கடற்படையினரால் தாம் கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாக அந்த கிராம மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

மூன்று நாட்களில் முள்ளிக்குளத்தில் இருந்து வெளியேறுவோம் என வாக்குறுதி வழங்கிய ஸ்ரீலங்கா கடற்படை இன்று பத்து வருடங்கள் கடந்துள்ள நிலையில், வாழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை எனவும் மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு சொந்தமான 53 ஏக்கர் காணியில் குடியிருந்த முள்ளிக்குளம் கிராம மக்கள் கடந்த 2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி ஸ்ரீலங்கா கடற்படையினரால் கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையிலே, கடற்படையினரை கிராமத்தில் இருந்து வெளியேற்றி தம்மை மீள்குடியேற்றுமாறு வலியுறுத்தி மன்னார் – முள்ளிக்குளம் கிராம மக்கள் இன்று 16 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

யுத்தம் இடம்பெறாத கிராமத்தை விட்டு கடற்படை வலுகட்டாயமாக வெளியேற்றி தமது வாழ்விடங்களை அழித்துள்ளதாக முள்ளிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts