வடமாகாணத்தில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடமாகாண சமூக சேவைகள் திணைக்களத்தால் வழங்கப்படும் கொடுப்பனவை பெறுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் பிரதேச செயலக சமூக சேவைகள் அலுவலர்களால் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1,500 ரூபாயும், கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3,000 ரூபாயும் மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டம் வடமாகாண சுகாதார அமைச்சின் கீழுள்ள சமூக சேவைகள் பிரிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் பாதிப்புத் தொடர்பில் அரச மருத்துவரின் மருத்துவ அறிக்கையைப் பெறவேண்டும். அத்துடன் விண்ணப்பபடிவத்தையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
மத்திய அரசின் சமூக சேவைகள் திணைக்களத்தால் மாதாந்தம் வழங்கப்படும் 3,000 ரூபாய் கொடுப்பனவைப் பெறுபவர்களும் இந்த கொடுப்பனவை பெற முடியும். வவுனியா, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான கொடுப்பனவுகள் கடந்த ஏப்ரல் மாதம் தொடக்கம் வழங்கப்பட்டு வருகின்றது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கான கொடுப்பனவுகள் இம்மாத இறுதி முதல் வழங்கப்படவுள்ளது. ஏப்ரல், மே மாதத்துக்கான கொடுப்பனவுகள் இணைத்து வழங்கப்படவுள்ளன.