வடமாகாணத்தில், முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோருக்கான மாதாந்த கொடுப்பனவு வழங்கும் திட்டம், வடமாகாண சுகாதார அமைச்சால் ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார அமைச்சு அலுவலக தகவல் தெரிவிக்கின்றது.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களை இரு பிரிவுகளாக பிரித்து, கழுத்துக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 3000 ரூபாயும், இடுப்புக்கு கீழ் பாதிக்கப்பட்டவர்களுக்கு 1500 ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
கொடுப்பனவு வழங்கும் ஆரம்ப நிகழ்வு எதிர்வரும் 23ஆம் திகதி வவுனியா பம்பைமடுவிலுள்ள வைகறை நிறுவன கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் இந்த திட்டத்தை ஆரம்பித்து வைக்கின்றார்.
இந்த மாதாந்த உதவித் தொகை வழங்குவதற்கான பயனாளிகள் தெரிவு, வடமாகாணத்தின் ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவு ரீதியில் வடமாகாண சுகாதார அமைச்சால் சேகரிக்கப்பட்டது.
மத்திய அரசின் சமூக சேவை அமைச்சால் மாற்றுவலுவுடையோருக்கு மாதாந்தம் வழங்கப்படும் 3000 ரூபாய் கொடுப்பனவை பெறாதவர்கள் இந்த மாகாண உதவித் தொகையை பெற்றுக்கொள்ளும் வகையில் செய்யப்பட்டுள்ளதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.